பவானிசாகர் அணைக்கு 68-வது பிறந்தநாள் – நீருக்கு அடியில் புதைந்து கிடக்கும் வரலாறு !!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண்னணை(மண் அணை) ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை போன்ற பல பெருமைகளுக்கு சொந்தமான அணை இது. 

சுமார் 10கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நாடு விடுதலை அடைந்த பின்னர் 1948 ஆம் ஆண்டு துவங்கி ஏழு ஆண்டு தொடர்ச்சியான கட்டுமான பணிகளுக்கு சந்தித்தது. பின்னர் அணை கட்டி முடிக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்களால், பவானி சாகர் அணை திறந்து வைக்கப்பட்டது. 

அணையின் உயரம் 105 அடி. சுமார் 32.8 டிஎம்சி வரை நீர் தேக்கி வைக்கும் கொள்ளளவு. நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி முதல் வடகேரளம் வரை, உள்ள பகுதிகளும் அடங்கும். 1950களுக்குபிறகு பவானி சாகரால், தரிசு நிலங்கள் அனைத்தும் நஞ்சை நிலங்களாக மாறின. லட்சக்கணக்கான விவசாயிகள், கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. விவசாயம் செழித்தது. பொருட்கள் விளைந்து குவிந்தது. சிறு சிறு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை குடிநீர் தேவையும் பூர்த்தி ஆனது.தன்னுடைய 67 ஆண்டுகால வரலாற்றில், பவானிசாகர் அணை 22 முறை தனது முழு கொள்ளளவான 102 அடியது எட்டியது. 30 முறை 100 அடியை எட்டியது.

Bhavani,dam,river,Bhavanisagar,cauvery,பவானிசாகர்

அதே போல் கடந்த 2018 முதல் 2022 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளாக 100 அடி நீர்மட்டத்தை எட்டி சாதனை படைத்தது. பவானிசாகரிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள், பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், புளியம்பட்டி. பவானி ஆகிய நகராட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் குடிநீர் தேவைகளும் பூர்த்தியாகின்றன. இதுபோக அணையில் இரண்டு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அதன் மூலம் 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Bhavani,dam,river,Bhavanisagar,cauvery,பவானிசாகர்

இவைகளைத் தாண்டியும் பவானிசாகர் அணைக்குள் ஓர் வரலாற்றுச்சிறப்பு ஒன்று மூழ்கிக் கிடக்கிறது. டணாய்க்கன் கோட்டை… பழங்கால சிறப்புமிக்க கோட்டையானது அது பவானி சாகருக்குள் மூழ்கிக் கிடக்கிறது. கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்த கோட்டை நம் கண்களுக்குப் புலப்படும்.

Bhavani,dam,river,Bhavanisagar,cauvery,பவானிசாகர்

ஹொய்சாளர் ஆட்சிக்காலத்தில் படைத்தளபதியான பெருமாள், தண்டநாயக்கனைப் பாராட்டி வழங்கப்பட்ட குறுநிலத்தை, அவர் ஆண்டு வந்த போது கி.பி 1254ஆம் ஆண்டு ஆற்றுச்சமவெளியில் இந்தக் கோட்டையைக் கட்டி ஆண்டார்.அதன் பின்னர், தண்டநாயக்கன் கோட்டை நாளடைவில் டணாயக்கன் கோட்டை ஆனது. பல நூறு ஆண்டுகள் ஆன பின்பும் கூட, இன்றும் நீருக்கடியில் கம்பீரமாய் நிற்கிறது. 

இதனிடையே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டதையடுத்து கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கனஅடி நீர், 120 நாட்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்தி 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தமிழர்களின் கட்டிடக்கலை பெருமையை பறைசாற்றும் விதமாக முழுக்க முழுக்க இந்திய பொறியாளர்களின் முயற்சியில் உருவான இந்த பவானிசாகர் அணை பல முறை முழு கொள்ளளவை எட்டியும் 67 ஆண்டுகள் கடந்து 68வது ஆண்டில் அடி எடுத்து வைத்து இன்றும் உறுதியாக நிற்கிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.