ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்த பழனிச்சாமி வனிதா தம்பதியருக்கு ஒன்றரை வயதில் அஜித் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அஜித் வீட்டில் உள்ள சமையலறையில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு உள்ள பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பாத்திரம் அஜித்தின் தலையில் சிக்கிக் கொண்டது. வலி தாங்க முடியாமல் அஜித் நீண்ட நேரம் கூச்சலிடவும் பெற்றோர்கள் குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை மீட்க பல மணி நேரம் போராடினர்.
இந்த நிலையில் பாத்திரத்தை எடுக்க முடியாததால் பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்று வந்துள்ளனர் அங்கு இருந்த தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரமாக போராடி குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை வெட்டி காயமின்றி பத்திரமாக அகற்றினர்.
துரிதமாக செயல்பட்டு குழந்தையின் தலையில் சிக்கியிருந்த சில்வர் பாத்திரத்தை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினரை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர் வெகுவாக பாராட்டினர்.