சேலம்: பாரத மாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்த வழக்கில் கைதான பாஜ மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், மருத்துவமனையில் இருந்து சிறைக்கு செல்ல மறுத்து அடம்பிடித்து தேம்பி தேம்பி அழுதார். அவரை வலுக்கட்டாயமாக போலீசார் அழைத்து சென்று, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாஜ சார்பில் நடந்த பாத யாத்திரையின்போது, மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பாரத மாதா நினைவாலய கதவுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, சிலைக்கு மாலை அணிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, கே.பி.ராமலிங்கத்தை, கடந்த 14ம் தேதி கைது செய்தனர். அவர் தனக்கு ரத்தக் கொதிப்பு, நெஞ்சுவலி உள்ளிட்ட உடல் பிரச்னைகள் இருப்பதாக தெரிவித்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனிடையே, அவரை 15 நாள் காவலில் வைக்க பென்னாகரம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவருக்கு எந்த உடல் நல பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்தனர். ஆனால், அவர் சிறைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை, அவரை டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி பாப்பாரப்பட்டி போலீசார் அவரை சிறைக்கு அழைத்து செல்ல வந்தபோது, நெஞ்சு வலிப்பதாக கூறி படுக்கையில் இருந்து இறங்காமல் படுத்துக்கொண்டார். இதையடுத்து, படுக்கையுடன் அவரை போலீசார் வெளியே அழைத்து வந்தனர். போர்டிகோவுக்கு வந்ததும் போலீஸ் ஜீப்பில் ஏறுமாறு போலீசார் கூறினர். ஆனால், படுத்துக்கொண்டே அவர், சிறைக்கு வர மறுத்து அடம் பிடித்தார். மேலும், கையை முறித்து
விட்டீர்களே என கூறி தேம்பி, தேம்பி அழுதார். அவரது உடலில் எந்த பிரச்னையும் இல்லை, நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார் என சான்றிதழை டாக்டர்கள் கொடுத்து விட்டனர். இனிமேலும் மருத்துவமனையில் அவரை வைக்க முடியாது என கூறி, அவரை படுக்கையில் இருந்து அலேக்காக தூக்கி, போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். உடனடியாக அவரை சேலம் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்றும் ஜீப்பில் இருந்து இறங்க மறுத்தார். அதிகாரிகள் வந்து சிறையிலும் மருத்துவமனை இருக்கிறது என்று கூறி அழைத்து சென்றார். பின்னர் சிறை மருத்துவமனையில் கே.பி.ராமலிங்கத்தை சேர்த்தனர்.