மேற்கு வங்க பாரதிய ஜனதா மாநிலத் தலைவராக இருந்தவர் திலீப் கோஷ். அதிரடி பேச்சுகளுக்கு சொந்க்காரர். தற்போது இவர்தான் மாநிலத்தின் ஹாட் டாக். அப்படி என்னதான் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் செய்தனர் என்பதை பார்ப்போம்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக திலிப் கோஷ் நியமிக்கப்பட்ட பிறகு மேற்கு வங்கத்தில் பாஜக பெரும் வெற்றிகளை குவித்தது. 2019 மக்களவை தேர்தலில் ஆளும் மம்தா பானர்ஜி கட்சிக்கு பெரும் சவாலாக விளங்கியது.
தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கூட பாஜகவின் வேட்பாளர் சுவேந்து ஆதிகாரி தோற்கடித்தார்.
இந்த நிலையில் கட்சியின் தலைமை பொறுப்பை திலீப் கோஷிடம் இருந்து பாஜக தலைமை பறித்தது. தொடர்ந்து அந்த இடத்துக்கு சுகந்தா மஜூம்தார் கொண்டுவரப்பட்டார்.
இது திலீப் கோஷூக்கு பெரும் அதிருப்தியை கொடுத்தது. தனது ஆதரவாளர்கள் மூலம் போராட்டங்களை தூண்டினார். பின்னாள்களில் அவரை சமாதானம்படுத்தும் முயற்சியாக அவருக்கு தேசிய துணை தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.
மஜூம்தாரும் திலீப் கோஷ் பாணியை கடைப்பிடிக்கிறார். எனினும் திலீப் கோஷ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்தத் தலைவரும் எம்.பி.,யுமான சௌகதா ராய், “திலீப் கோஷ் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு முன்பும் திரிணாமுல் காங்கிரஸூடன் தொடர்பில் இருந்தார்.
தற்போதும் தொடர்பில் இருக்கிறார். அவர் எப்போது வேண்டுமென்றாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வருவார். அவரை வரவேற்க காத்திருக்கிறோம்” எனக் கொளுத்திப் போட்டார்.
இது தற்போது மாநிலத்தின் ஹாட் அரசியல் டாபிக் ஆக மாறியுள்ளது. இந்தக் கேள்வி தொடர்பாக பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுஜன் சக்ரபோர்த்தி, “நாங்கள் தொடக்கத்தில் இருந்தே பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டிவருகிறோம்.
இந்த இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் தொடர்பில் உள்ளன. தலைவர்களை தங்களுக்குள் மாற்றிக் கொள்கின்றன. அது சௌகதா ராய் பேச்சின் மூலம் அப்பட்டமாக வெளிவந்துள்ளது” என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த திலீப் கோஷ், “இது ஒரு ஏமாற்று வேலை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூழ்கிக் கொண்டுவருகிறது. இதைக் காப்பாற்ற இவ்வாறு பேசுகின்றனர்” என்றார்.
இந்த நிலையில் திலீப் கோஷிற்கு ஆர்எஸ்எஸ் முன்னாள் பரப்புரையாளர் ஒருவர் ஆதரவு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “திலீப் கோஷ், பாரதிய ஜனதா உறுப்பினர். அவர் கட்சி மாற மாட்டார்.
மாநிலத்தில் கட்சியை வளர்த்தெடுத்தலில் அவரின் பங்கு அளப்பரியது. அவரின் பேச்சுகள் கட்சியை அடிமட்ட அளவில் கொண்டுசென்றன. 2018இல் அவர் மீண்டும் மாநில தலைவர் பொறுப்பை ஏற்ற போதுதான், 2019 மக்களவை தேர்தலில் பெரும் வெற்றி பெற்றோம்.
சுவேந்து ஆதிகாரி மற்றும் திலீப் கோஷ் ஆகியோர் மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதாவின் வலுவான தலைவர்கள்” என்றார். திலீப் கோஷ் தற்போது மெதினாபூர் எம்.பி.யாக உள்ளார். இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று எம்எல்ஏ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“