பிடிஆர் தியாகராஜன் விவாதப் பேச்சு வைரலாவது ஏன்? நிதியமைச்சர் எதிர்கொண்ட சர்ச்சைகளும் அவரது பதில்களும்

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அதில், இலவசங்கள் குறித்து அவரிடம் கேட்டப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் சமூக ஊடகத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

இந்த விவாதத்தில், தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் மாநில அரசு வழங்கும் இலவசங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.

why ptr palanivel thiagarajan speech become trending

இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதற்கு எந்த அரசமைப்புச் சட்ட அடிப்படையும் இல்லை என்றும், உலகம் முழுவதும் அரசமைப்புச்சட்டப்படி நடக்கும் நாடுகளில் நிதியை எதில் செலவிடுவது என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ள உரிமையாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.

அதையடுத்து கேள்வி கேட்ட தொலைக்காட்சி நெறியாளர், பல மாநிலங்களில் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இதை நீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என்றால், யார்தான் இலவசங்களை ஒழுங்குபடுத்துவது என்று கேட்டார்.

அதற்கு பதலளித்த பிடிஆர், நல்ல இலவசம் கெட்ட இலவசம் என்பதை எப்படி வரையறுப்பது என்று கேட்ட பிடிஆர்,

“நான் இங்கு ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் கூறும் கருத்திற்கு ஏதாவது அரசியலமைப்புச் சட்ட அடிப்படை இருக்க வேண்டும். அல்லது நிதி மேலாண்மையில் சிறப்பு அறிவு இருக்கவேண்டும். அதாவது பொருளாதாரத்தில் முனைவர் பட்டங்கள் பெற்றவராகவோ, நோபல் பரிசு பெற்றவராகவோ இருக்கவேண்டும். அல்லது, நிதி மேலாண்மையில் எங்களைவிட சிறந்த முறையில் செயல்பட்ட வரலாறு இருக்கவேண்டும். இந்த மூன்றில் ஏதாவது ஒன்று இருந்தால் நீங்கள் கூறுவதை நாங்கள் கவனிக்கலாம். உங்களிடம் சிறப்பான செயல் திறனுக்கான வரலாறு இருக்க வேண்டும். நீங்கள் பொருளாதாரத்தை சிறப்பாக வளர்த்துள்ளீர்கள், அல்லது கடனை குறைத்துள்ளீர்கள், தனிநபர் வருவாயை அதிகரித்துள்ளீர்கள். வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளீர்கள் என ஏதாவது இருந்தால் நீங்கள் கூறுவதை நாங்கள் செவி மடுக்கலாம் என்று அவர் கூறினார்.

அத்துடன், நிதிப் பற்றாக்குறை விகிதம் இந்திய அளவைவிட தமிழ்நாட்டில் குறைவு, பணவீக்கம் இந்திய அளவினைவிட தமிழ்நாட்டில் குறைவு, கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட மனிதவளக் குறியீடுகளில் இந்தியாவில் தமிழ்நாடு உயர்ந்த இடத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://twitter.com/ptrmadurai/status/1560222721870483463

இவற்றில் எதுவுமே இல்லை என்றால் நாங்கள் ஏன் யாரோ ஒருவர் சொல்வதை கேட்கவேண்டும், அதை கடவுளின் ஆணை போல ஏற்கவேண்டும்?

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனால், எந்த ஒரு மனிதனையும் கடவுள் என்று நம்ப நான் தயாராக இல்லை.

முதலமைச்சர் எனக்கு ஒரு பொறுப்பை வழங்கி இருக்கிறார். அதனை நான் சரியாக செய்து வருகிறேன். நாங்கள் ஒன்றிய அரசை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அடுத்த மூன்று ஆண்டுகளும் அவ்வாறே தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோம் என உறுதிபட கூறுவேன்,” என்றார்.

மேலும், இந்த காணொளியின் முழு வடிவத்தையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிடிஆர் இவ்வாறு அதிரடியாக பதில் கூறுவது முதல் முறையல்ல. இதற்கு முன், பல்வேறு சமயங்களில் அவர், குறிப்பாக, சமூக வலைதளத்தில் இத்தகைய பதில்களை அளித்துள்ளார்.

செருப்பு வீசிய பெண்ணை ‘சிண்ட்ரெல்லா’ என அழைத்தவர்

சமீபத்தில், ,ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் லட்சுமணனின் உடல் அவரது சொந்த மாவட்டமான மதுரைக்கு கொண்டு வரப்பட்டபோது உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்திருந்தார்.

அப்போது, பழனிவேல் தியாகராஜனின் வண்டி மீது பாஜகவினர் செருப்பு வீசினார்கள்.

இது அரசியல் ரீதியில் அதிர்வலைகளை ஒருபுறம் ஏற்படுத்த, மறுபுறம், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பின்னர் கூறுகிறேன், ஆனால் இப்போதைக்கு,

https://twitter.com/ptrmadurai/status/1558655192866123776

காணாமல் போன “சிண்ட்ரெல்லா ஆஃப் தி ஓல்ட் ஏர்போர்ட் டெர்மினல்”, நூற்றுக்கணக்கான மீட்டர்கள் ‘பாதுகாப்பான’ பகுதிக்குள் ‘அனுமதிக்கப்பட்ட’ பல்லாயிரக்கணக்கான தனது கட்சி உறுப்பினர்களுடன், தனது செருப்பைத் திரும்பப் பெற விரும்பினால், எனது ஊழியர்கள் அதை உங்களுக்காகச் பாத்திரமாக வைத்துள்ளனர்,” என்று பதிவிட்டிருந்தார்.

ஜி.எஸ்.டி கவுன்சில் கலந்துகொள்ளதாதற்கு அவர் அளித்த பதில்

கடந்த 2021ம் ஆண்டும் செப்டெம்பர் மாதம், லக்னெளவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தபோது அதில் மாநில நிதியமைச்சரான நீங்கள் ஏன் பங்கேற்வில்லை என்று கேட்கப்பட்டபோது, அவர், “வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். உரிய நேரத்தில் லக்னெள செல்ல இயலவில்லை,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

சமூக ஊடகத்தில், ஜி.எஸ்.டி கவுன்சிலை விடவும் வளைகாப்பு விழா அவசியமா என்ற விமர்சனம் எழுந்தது.

https://twitter.com/ptrmadurai/status/1439797928592166921

மேலும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது, பிடிஆரின் கருத்தை குறிப்பிட்டு, “உறவினரின் வளைகாப்பு விழாவில்” கலந்து கொண்டதால், லக்னெளவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து பதில் அளித்த பிடிஆர், “அது உறவினர் வீட்டு விழா இல்லை, சமுதாய வளைகாப்பு விழா,” என குறிப்பிட்டார்.

வானதியை பிளாக் செய்த பிடிஆர்

கடந்த 2021ஆம் ஆண்டு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன்னை ட்விட்டரில் ப்ளாக் செய்த ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்ட வானதி,” நமது நிதியமைச்சரால் விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாதது வருத்தமளிக்கிறது. நீங்கள் என்னைப் பொய் கூறுபவர் அல்லது குறைந்த ஐ.க்யூ கொண்டவர் என அழைக்கலாம். ஆனால், இதனால் உண்மை மாறாது” என கூறினார்.

அதற்கு பதிலளித்த பிடிஆர் பழனிவேல், ”துர்நாற்றத்தை தவிர்க்க ஒருவர் ஜன்னல்களை தாழிட்டுக் கொள்ளும் சாதாரண மனிதரைப் போல உங்களைப் போன்றவர்களை நான் ‘பிளாக்’ செய்து விடுவேன். உங்களிடம் ‘நல்லவர்’ என்ற சான்றிதழைப் பெறுவதில் பொருளில்லை. தயவு செய்து என் நேரத்தை வீணாக்காதீர்கள்,” என பழனிவேல் தியாகராஜன் பதில் பதிவிட்டார்.

https://www.youtube.com/watch?v=rpAcbZY8GJQ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil


Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.