காந்திநகர்: குஜராத்தை உலுக்கிய பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 11 பேரும் நன்னடத்தை அடிப்படையில் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், ‛‛அவர்கள் பிராமணர்கள். மிகவும் நல்ல குணம் கொண்டவர்கள்” என விடுதலைக்கு பரிந்துரைந்த பாஜக எம்எல்ஏ சிகே ராவ்ல்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ல் கோத்ரா கலவரம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது.
இந்த வேளையில் பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 20 வயது நிரம்பிய நிலையில் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
11 பேருக்கு ஆயுள் தண்டனை
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை துவங்கினர். அதன்பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவர்கள் அனைவருக்கும் 2008 ம் ஆண்டில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனை மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து அவர்கள் 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் இருந்து விடுதலை
இந்நிலையில் தான் கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த 11 பேரும் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டனர். அதாவது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நன்னடத்தை அடிப்படையில் குஜராத் அரசு ஆளுநர் ஒப்புதலோடு கைதிகளை விடுவித்தபோது இவர்கள் 11 பேருக்கும் விடுதலை கிடைத்துள்ளது. இது மீண்டும் சர்ச்சையானது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
சுதந்திர தினத்தன்று டெல்லியில் தேசியக்கொடி ஏற்றி பெண்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசிய நிலையில் அவரது சொந்தமாநிலமான குஜராத்தில் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 கைதிகள் விடுதலை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பின்னணியில் 2 பாஜக எம்எல்ஏக்கள்
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான ப சிதம்பரம் விமர்சனம் செய்திருந்தார். மேலும் விடுதலையின் பின்னணியில் 2 பாஜக எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறியிருந்தார். அதாவது கைதிகளை விடுதலைக்கு பரிந்துரைத்த குழுவில் பாஜக எம்எல்ஏக்கள் சிகே ராவ்ல்ஜி மற்றும் சுமன் சவுஹான் ஆகியோர் உள்ளனர் என கூறியிருந்தார்.
பாஜக எம்எல்ஏ கருத்து
இந்நிலையில் தான் சிகே ராவ்ல்ஜி எனும் பாஜக எம்எல்ஏ 11 பேரின் விடுதலை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். “அவர்கள் 11 பேரும் குற்றம் செய்தார்களா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் சிறையில் இருந்த காலத்தில் அவர்கள் நன்னடத்தையுடன் நடந்து கொண்டுள்ளனர். அவர்கள் பிராமணர்கள். நல்ல குணம் கொண்டவர்கள்” என தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி உள்ளது. இதனை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.