மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் – 1’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை, அதே பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம். இவரது கனவுப் படமான இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் முதல்பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நிழல்கள் ரவி, சரத்குமார், ஷோபிதா, பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையத்துள்ளார். பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் 9-வது முறையாக தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இதற்கிடையில், சென்னையில் செப்டம்பர் 6-ம் தேதியும், ஹைதராபாத்தில் 8-ம் தேதியும் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளன. ஐமேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்கிற அறிவிப்புடன், இந்தப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம் என படக்குழு அதிகாரபூர்வமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ‘பொன்னி நதி’ பாடலைத் தொடர்ந்து ‘சோழா சோழா’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. வந்தியதேவன் அறிமுகமாகும் வகையில் ‘பொன்னி நதி’ பாடல் அமைந்தநிலையில், தற்போது சோழர்களின் வீரம், குறிப்பாக ஆதித்த கரிகாலன் போர்க்களத்தில் வீரத்தை பறைசாற்றும் வகையிலும், அவரின் காதல் வடுக்களையும் சொல்லும் விதமாக இரண்டாவது பாடல், சத்ய பிரகாஷ், வி.எம்.மகாலிங்கம், நகுல் அபியங்கர் குரல்களில், இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளில், ஏ.ஆர் ரகுமான் இசையில் அதிரடியாக வெளியாகியிருக்கிறது.