பெண் ஓட்டிச் சென்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென்று தீப்பற்றி எரிந்தது: திண்டுக்கல்லில் பரபரப்பு

பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற மின்சார ஸ்கூட்டர் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்லை சேர்ந்தவர் அருள்ஜோதி. இவருக்கு வயது 33. இவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று தனது எலக்ட்ரிக் பேட்டரி ஸ்கூட்டரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே அய்யலூர் மேம்பாலத்தில் ஸ்கூட்டர் சென்று கொண்டிருந்த பொழுது, திடீரென பேட்டரி பகுதியிலிருந்து புகையுடன் நெருப்பு கிளம்பியது. 

புகை வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருள்ஜோதி மின்சார ஸ்கூட்டரை விட்டு இறங்கி ஓடிவிட்டார். சற்று நேரத்தில் ஸ்கூட்டர் முழுவதும் தீ பற்றி எரிந்து சாம்பல் ஆனது.  ஸ்கூட்டரில் நெருப்பு பற்றிய உடன் சுதாரித்துக் கொண்டு உடனடியாக ஸ்கூட்டரை விட்டு இறங்கியதால் பெரும் தீ விபத்தில் இருந்து அருள்ஜோதி உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக கருதப்படும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு இவற்றை வாங்குபவர்களுக்கு பல வித வரிச்சலுகையை வழங்கி வருகிறது. எனினும், மின்சார வாகனங்கள் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இவை மின்சார வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. 

சில மாதங்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் சார்ஜ் போடப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் வெடித்ததில் தந்தையும்,13 வயதே ஆன அவரது மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இது மட்டுமின்றி, இந்த வரிசையில் திருவள்ளூர், திருச்சி, சென்னை என தொடர்ச்சியாக மின்சார வாகனங்கள் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.