சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
டிரைலரிலேயே படத்தின் கலர், கன்டென்ட், சர்ச்சை உள்ளிட்ட பல விஷயங்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்டுள்ளது பா. ரஞ்சித்தின் போல்ட்னஸை குறிக்கிறது.
பொண்ணும் பொண்ணும்.. பையனும் பையனும் லவ் பண்ணக் கூடாதா? என்கிற கேள்வியுடன் இந்த படத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களின் காதலுக்கும் குரல் எழுப்பி இருப்பது தெளிவாக தெரிகிறது.
பா. ரஞ்சித் படம்
சார்பட்டா பரம்பரை படத்துக்கு பிறகு இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி உள்ள படம் தான் நட்சத்திரம் நகர்கிறது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி சியான் விக்ரமின் கோப்ரா படத்துக்கு போட்டியாக இந்த படம் வெளியாகிறது. சியான் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கி வருவதும் இயக்குநர் பா. ரஞ்சித் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷரா விஜயன் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
காளிதாஸ் ஜெயராம்
லோகேஷ் கனகராஜின் விக்ரம், கிருத்திகா உதயநிதியின் பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸ் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. ரொமான்ஸ், கோபம், சோகம் என காட்சிக்கு காட்சி மிரட்டி எடுக்கிறார். காதல் எல்லாருக்கும் வரும் என்று தத்துவங்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான வசனங்கள் இடம்பெற்று வந்த டிரைலரில் காதல் என்றாலே வலி தானே என காளிதாஸ் ஜெயராம் பேசும் வசனம் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கிறது.
இசையமைப்பாளர் யார்
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பணி புரிந்து வந்த நிலையில், அவர்கள் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தெருக்குரல் அறிவு சர்ச்சையால் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த படத்துக்கு முதலில் இளையராஜா இசையமைப்பதாக இருந்த நிலையில், புதுமுகம் டென்மா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை போலவே ஒலிப்பதிவும் ரொம்பவே ஃபிரெஷ்ஷாக இருக்கு.
பெண்ணும் பெண்ணும் காதலிக்கக் கூடாதா
காளிதாஸ் ஜெயராம் – துஷரா விஜயன் காதல், கலையரசனின் கட்டாய திருமணம் உள்ளிட்ட காட்சிகளை தொடர்ந்து பெண்ணும் பெண்ணும் காதலிக்கக் கூடாதா? ஆணும் ஆணும் காதலிக்கக் கூடாதா? என எழும் ஓரினச் சேர்க்கையாளர்களின் குரல் தான் படத்தின் கதையா? என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. காதலுக்கும் வயசுக்கும் என்ன சம்பந்தம் போன்ற புரட்சிகரமான காதல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
டிரைலர் எப்படி இருக்கு
இதை அனைத்தும் தாண்டி இயக்குநர் பா. ரஞ்சித்தின் காட்டுப் பூனை நாட்டுப் பூனை நாடகத்தின் மூலம் காதலுக்கு எதிராக இருக்கும் சாதிய பிரச்சனைகளையும் பேசுகிறது இந்த நட்சத்திரம் நகர்கிறது. விஷுவல், மியூசிக், காட்சிகள் என இதற்கு முன் பார்த்திராத பா. ரஞ்சித்தின் படமாக இந்த படம் இருக்கும் என தெரிகிறது. சிம்பு இந்த படத்தின் டிரைலரை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.