“உங்களுக்குள் தேச பக்தி தோன்றிய தருணம் எது?”
“1934-ல் காந்தியடிகள் நாகர்கோவிலுக்கு வருகைபுரிந்தபோது, என்னைத் தோளில் சுமந்துகொண்டு சென்று காட்டினார் எனது தந்தை. அப்போது, `நம் நாட்டில் விளையும் பருத்தியை இங்கிலாந்து எடுத்துச்சென்று எந்திரத்தில் நெசவு செய்து, அதனை மீண்டும் நம் நாட்டுக்கே கொண்டுவந்து அதிகவிலைக்கு விற்கிறார்கள் ஆங்கிலேயர்கள். அதனால், நம் நாட்டுப் பருத்தியை நாமே கைத்தறி மூலம் நெய்து கதராடையாக நாம் உடுத்த வேண்டும்’ என்று பேசினார் காந்தி. அந்தத் தருணம் முதல் இன்றுவரையிலும் கதர் தவிர வேறு எந்த ஆடையும் என் உடலில் பட்டதில்லை. காந்தியின் நெகிழ்ச்சியானப் பேச்சே எனது தேசபக்திக்குக் காரணம்”
“உங்களைப்போன்ற தியாகிகளுக்கு இப்போது மரியாதை கொடுக்கப்படுகிறதா?”
“இல்லையென்று முற்றிலும் மறுக்க முடியாது. அதேநேரத்தில், போதுமான பெருமை சேர்க்கப்படவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளராக இருந்தபோது கொங்கு மாவட்டங்களுக்குப் பொறுப்பாளராக இருந்தேன். ஒருமுறை சேலத்தில் காந்தி சிலை உடைக்கப்பட்டதால், நிதி வசூலித்து மீண்டும் சிலையை அமைத்துவிட்டேன். அதனைத் திறந்துவைக்க காமராஜரை அழைக்கச் சென்றபோது, வாசுதேவையா என்ற தியாகியைத் தலைமை தாங்க அழைக்கச்சொன்னார் காமராஜர். அவர் யாரென்று தெரியாமல் விழிக்க, ‘வ.ஊ.சி செக்கிழுத்தபோது ஒற்றைமாட்டுச் செக்கை அவர் மட்டுமே இழுத்தார். இரட்டை மாட்டுச் செக்கை வ.ஊ.சி-யுடன் இணைந்து இழுத்தவர்தான் வாசுதேவையா’ என்று காமராஜர் விளக்கினார். இதனை எதற்குச் சொல்கிறேன் என்றால், நமக்கே தெரியாமல் பலநூறு தியாகிகள் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து தேசியவாதிகள் அவர்களுக்குப் புகழ் சேர்க்க வேண்டும்”
“உங்கள் வாழ்நாளில் எத்தனையோ போராட்டங்களை நடத்தியிருப்பீர்கள், அதில் குறிப்பிடும்படியாக எதுவும் உண்டா?”
“ஆங்கிலேய கலெக்டராக இருந்த ஆஷ்துரை, வ.ஊ.சி-யின் சுதேசி கப்பல் நிறுவனத்தைச் சீரழித்தவன். 5 பேரை அவனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவன். அவனைப் பழிவாங்க நினைத்த வாஞ்சிநாதன், மணியாச்சிக்கு ஆஷ்துரை ரயிலில் வந்தபோது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, பிறகு தானும் தற்கொலை செய்துகொண்டான். வாஞ்சிநாதனின் நினைவைப் போற்றும் வகையில், மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சிமணியாச்சி என்று பெயர் சூட்ட வேண்டும் என்று 17/6/1979-ல் போராட்டம் நடத்தினேன்.
ரயில் நிலையத்தில் உள்ள பெயர் சுவற்றில், மணியாச்சிக்கு முன்புறமாக வாஞ்சி என்று எழுதியதால், கைதுசெய்யப்பட்டு 28 நாள்கள் பாளையங்கோட்டையில் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்தேன். விடுதலையான பின்னர், ஒருமுறை பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தமிழ்நாடு வந்தார். அவருடன் காரில் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி வாஞ்சிநாதன் பற்றிய வரலாறைக் கூறினேன். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டவர், தென்காசியில் பொதுக்கூட்டத்தில் மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சிமணியாச்சி என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்தார் ராஜீவ் காந்தி. அதனை சமீபத்தில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்”
“வீட்டுக்கு விடு தேசியக் கொடி ஏற்றுங்கள் என்று பிரதமர் சொல்லும் அளவுக்குத்தான் நம் குடிமக்களின் தேசப்பற்று இருக்கிறதா?”
“அப்படியில்லை. இறைவனை வணங்குவது என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தபோதும் அதனை நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதுபோல, தேசப்பற்று எல்லோர் மனதிலும் இருந்தபோதும்கூட, பிரதமர் என்கிற முறையில் நினைவுபடுத்துவது தவறல்ல”
“உங்களது குடும்பமே காந்தியைப் பின்பற்றிய வேளையில், உங்களது மகள் தமிழிசை மட்டும் பா.ஜ.க பக்கம் சென்ற காரணம் என்ன?”
“படித்த, அறிவுள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமையுண்டு. குமரியிலிருந்து பாதையாத்திரை நான் சென்றபோது தந்தை என்கிற முறையில் எனது உடல்நிலையைப் பார்த்துக்கொள்ள கூடவே பயணித்தார் தமிழிசை. இருந்தபோதும், அவரின் தனிப்பட்ட முடிவில் நான் தலையிடுவது இல்லை”
“போதைப் பொருள்களுக்கு எதிராகப் பேசும் ஸ்டாலின், மதுவை மட்டும் ஒழிக்கவில்லையே?”
“போதை தீய பாதை என்று ஸ்டாலின் பேசியதை வரவேற்கிறோம். ஆனால், அதேபோன்ற போதையைத்தானே குடியும் கொடுக்கிறது. ‘கதராடை முழுமையாக எல்லா மக்களுக்கும் கிடைக்கும்வரை ஒவ்வொருவரும் குறைந்த ஆடையை அணிய வேண்டும்’ என்று காந்தி சொல்லியிருந்தார். மக்களிடம் அது சரியாகச் சென்று சேராததால், ‘சொல்பவர்கள் முதலில் அதனைக் கடைபிடிக்க வேண்டும், இனி அரையாடைதான் நான் அணியப்போகிறேன்’ என்று மதுரையில் உறுதியெடுத்துக்கொண்டார் காந்தி, அன்று முதலே அரையாடையுடன் தான் வாழத்தொடங்கினார். இதன்மூலம், ஒருவர் ஒரு விஷயம் பற்றி சொல்ல வேண்டுமென்றால், முதலில் அவர் அதனைச் செய்துகாட்ட வேண்டும். அரசே டாஸ்மாக் கடைகளைத் திறந்துவைத்துக்கொண்டு, மாணவர்களை அழைத்து `போதை தீய பாதை’ என்றால் எப்படிச் சரியாகும்? அதனால், முதலில் பூரண மதுவிலக்கை அமலப்டுத்திவிட்டு, மற்ற போதைப் பொருள்களைப் பற்றிப் பேசினால்தான் எடுபடும்”