காவல்துறை அதிகாரிகள் போல வேடமிட்டு மோசடியில் ஈடுபடுவது எப்போதாவது நடக்கும் அதிர்ச்சி சம்பவம் என்பது மாறி, தற்போது அடிக்கடி நடக்கத் தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் காவல்துறை அதிகாரிக்கே அபராதம் விதித்த போலி போலீஸ் ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பானது. அதை மிஞ்சும் ஒரு காட்சி பீகார் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது.
பீகார் மாநிலத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் கொண்ட குழு, ஹோட்டல் ஒன்றில் காவல்நிலையம் போன்று செட்அப் செய்து, கடந்த 8 மாதமாக இயங்கி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த போலி காவல்நிலையம், காவல்துறை காவல்துறை உயரதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் தான் இயங்கிவந்திருக்கிறது.
காவலர்களைப் போலச் சீருடை அணிந்தும், உள்ளூர் ஆள்களிடம் போலியாகத் துப்பாக்கி செய்து அதைப் பயன்படுத்திக்கொண்டும், அவர்களில் உயரதிகாரி, கான்ஸ்டபில் போன்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டும் கச்சிதமாகச் செயல்பட்டிருக்கின்றனர். புகார் அளிக்க வருபவர்களிடம் பணம் பறிப்பது மட்டுமே இவர்களுக்கான வருமானமாக இருந்திருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் இரண்டு போலி போலீஸ் ஆசாமிகள் காவல்துறை சீருடையில், துப்பாக்கிகளைச் சுமந்து சென்றபோது, உண்மையான காவலர் ஒருவர் பார்த்திருக்கிறார். அதைத் தொடர்ந்து விசாரித்தபோது உண்மை வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த கும்பலின் தலைவர் இன்னும் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.