இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில், 5 முக்கிய தீர்மானங்கள் குறித்து மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். அதில், `அடிமைத்தனத்தை முற்றிலுமாக வேரறுத்தல், நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டுதல், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்றுதல், நாட்டின் பாரம்பர்யத்தை பாதுகாத்தல், 2047-க்குள் நாட்டின் முக்கிய குறிக்கோளை எட்டுதல்’ என 5 தீர்மானங்களை மக்களுக்கு வலியுறுத்தினார்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையை மேற்கோள்காட்டி இந்தியா வல்லரசாவதற்கான வழிகுறித்துப் பேசியிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் `பல்லியா பலிதான் திவாஸ்’ விழாவையொட்டி, பல்லியா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.
அப்போது இந்தியா வல்லரசாவது குறித்துப் பேசிய யோகி ஆதித்யநாத், “சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி, 5 முக்கிய தீர்மானங்களை மக்களுக்கு வழங்கினார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த 5 தீர்மானங்களை மனதில்வைத்து கடமையின் பாதையில் சென்றால், இந்தியா நிச்சயம் வல்லரசாக மாறும். மேலும், வரும் நாள்களில் இந்தியா உலகை வழிநடத்தும்” என்று கூறினார்.
பல்லியா-வின் சிங்கம் என்று அறியப்படும் சிட்டு பாண்டே, நாடறிந்த புரட்சியாளர். அவரின் நினைவாகவே `பல்லியா பலிதான் திவாஸ்’ என்ற இந்த விழா கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.