போபால்: மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் கைப்பற்றப்பட்ட பொருட்களைக் கண்டு அதிகாரிகளே மிரண்டுவிட்டனர்.
Recommended Video – Watch Now
நமது நாட்டில் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக லஞ்சமும் ஊழலும் உள்ளது. இதை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுக்கும் போதிலும் அது பெரியளவில் பலன் தருவதாக இல்லை.
இருப்பினும், அனைத்து வகையிலான ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது. அப்படித்தான் மத்தியப் பிரதேசத்தில் நடந்த ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொத்து
பளபளக்கும் சுவர், நீச்சல் குளம், மினி பார், இவையெல்லாம் எதோ 5 நட்சத்திர ரிசார்ட் வசதிகள் என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம். இவை அரண்மனை போல இருக்கும் மத்தியப் பிரதேச அரசு அதிகாரியின் ஆடம்பர அம்சங்கள் ஆகும். 10,000 சதுர அடியில் உள்ள இந்த பங்களாவில் சிறிய ஹோம் தியேட்டரும் உள்ளது. மேலும், உதவி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்தோஷ் பாலுக்கான தனி அலுவலகமே உள்ளது.

ரெய்டு
மத்தியப் பிரதேசத்தில் ஆர்டிஓ ஆபிசிஸ் பணிபுரிந்து சந்தோஷ் பால் வருகிறார். இவரது மனைவி ரேகா அதே அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளைச் சேர்த்தாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், பொருளாதார குற்றப்பிரிவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அரசு அலுவலரின் வீட்டிற்குள் இருக்கும் ஆடம்பரத்தைக் கண்டு அதிகாரிகளே ஒரு நிமிடம் திகைத்துப் போய்விட்டனர்.

வீடியோ
சந்தோஷ் பால் வீட்டில் நடத்தப்பட்ட இந்த ரெய்டு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவரது வீட்டில் இருந்து ₹ 15 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த நகைகள், சொகுசு கார்கள் மீட்கப்பட்டன. இது தவிர அவருக்கு மேலும் நான்கு வீடுகள் மற்றும் ஒரு பண்ணை வீடு இருப்பதும் இந்த ரெய்டில் தெரிய வந்தது. அது தொடர்பான ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றிச் சென்றனர்.

650% அதிகம்
முதற்கட்ட விசாரணையில் மொத்தம் ரூபாய் 300 கோடிக்கும் அதிகமான சொத்துகள் மீட்கப்பட்டன. இந்தத் தம்பதி தங்கள் வருமானத்தைக் காட்டிலும் 650% அதிகமாகச் சொத்துகளைச் சேர்த்தும் தெரிய வந்தது. இதையடுத்து அனைத்தையும் போலீசார் கைப்பற்றிச் சென்றனர். ஜபல்பூர் ஆர்டிஓ ஆபீஸில் இவர் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவரது குடும்பத்தினர் பலரும் இங்கு பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டு இவர் மீது ஆட்டோ டிரைவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரெய்டு நடத்தப்பட்டது.