தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 5,085 ரூபாய் கோடி பாக்கி வைத்துள்ளன. இதில் தெலங்கானா, அதிகபட்சமாக 1,381 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தமிழகம், 926 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
மேலும், ராஜஸ்தான் 501 கோடி ரூபாய், ஜம்மு காஷ்மீர் 435 கோடி ரூபாய், ஆந்திரா 413 கோடி ரூபாய், மகாராஷ்டிர மாநிலம் 382 கோடி ரூபாய், மத்திய பிரதேசம் 229 கோடி ரூபாய், ஜார்க்கண்ட் 215 கோடி ரூபாய், பீகார் 174 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. இதேப் போல், மணிப்பூர் 30 கோடி ரூபாய், சத்தீஸ்கர் 27.5 கோடி ரூபாய், மிசோரம் 17 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன.
இந்நிலையில் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு பாக்கி வைத்துள்ளதன் காரணமாக தமிழகம், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை விதித்து உள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இதில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு நிலுவைத் தொகை அதிகமாக உள்ளதால் அந்த மாநிலங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த மாநிலங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய தேதிக்கு பிறகு நிலுவையில் உள்ள தொகைக்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும். விதிகள் 2022-ன் கீழ் இந்த நடவடிக்கையை மத்திய மின் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.