யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடம்நேற்றைய தினம் (18) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி – அறிவியல் நகரில் அமைந்துள்ள இந்த புதிய தொழில்நுட்ப பீடத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 525 மில்லியன் ரூபா செலவில் இக் கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிறேமகுமார, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும், யாழ். பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கணக்காளர் ஆர். ஏ. யூ. ரணவீர, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபாவதி கேதீஸ்வரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.