ராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிளையில், பாதுகாப்பு பெட்டகங்களிலிருந்து ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், வங்கியின் ரொக்க கையிருப்பில் முரண்பாடுகள் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, வங்கி கிளையின் பணத்தை எண்ணுவது என முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.
பின்னர் பணத்தை எண்ணும் பணி தனியாருக்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்டதில், வங்கிக் கிளையிலிருந்து ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் காணாமல் போனது தெரியவந்திருக்கிறது. மேலும் இதில், ரூ.2 கோடி மதிப்பிலான நாணயங்கள் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
அதைத்தொடர்ந்து, காணாமல் போன ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திவருகின்றனர். அந்த வரிசையில், டெல்லி, ஜெய்ப்பூர், தௌசா, கரௌலி, சவாய் மாதோபூர், அல்வார், உதய்பூர், பில்வாரா போன்ற நகரங்களில் சுமார் 15 வங்கி முன்னாள் அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் பிற இடங்கள் என மொத்தம் 25 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.