சென்னை : யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் இன்று தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கன்னா, ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குடும்ப, காமெடி படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தங்கமகன் படத்திற்கு பிறகு இவர்களின் காம்போ மீண்டும் இணைந்துள்ள படம். இந்த படத்தில் தனுஷ் 2 பாடல்கள் பாடி உள்ளார். தனுஷ், அனிருத் மீண்டும் இணைந்துள்ள திருச்சிற்றம்பலம் பட பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.
திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை பாசிடிவ் விமர்சனங்களையே படம் பெற்றுள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் படத்தின் கலெக்ஷன் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
ரசிகர்களிடமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. கர்ணன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ரிலீசாகி உள்ள தனுஷ் படம். ஜகமே தந்திரம், மாறன், தி கிரே மேன் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் தனுஷிற்கு இந்த படம் மிகப் பெரிய கம்பேக்காக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் தியேட்டரில் ரிலீசாகி 6 மணி நேரங்கள் மட்டுமே ஆன நிலையில் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. பைரசி தளங்களில் தனுஷ் படம் வெளியானதால் ரசிகர்கள் படக்குழுவினர் மட்டுமின்றி, ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் ரிலீசான கார்த்தியின் விருமன் படம் தியேட்டரில் ரிலீசாகி 24 மணி நேரத்திற்கு பிறகு பைரசியில் கசிந்த நிலையில், தனுஷின் திருச்சிற்றம்பலம் வெறும் 6 மணி நேரத்தில் வெளியாகி உள்ளது கோலிவுட்டிற்கே ஷாக் கொடுத்துள்ளது. பெரிய நடிகர்களின் படங்களும் தியேட்டரில் ரிலீசாகி சில மணி நேரங்களிலேயே பைரசியில் வெளியாகி விடுவது தொடர்கதையாகி வருவதால் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.