பெங்களூரு: தென்னிந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர் பி.எஸ்.எடியூரப்பா. கடந்த 2021-ம் ஆண்டு அவர் கர்நாடக முதல்வராக இருந்தபோது, வயதை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்யுமாறு பாஜக மேலிடம் உத்தரவிட்டது. இதையடுத்து மிகுந்த வருத்தத்துடன் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.
ஆட்சியிலும் கட்சியிலும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதால் அரசியலில் இருந்து விலகி பாஜக கூட்டங்களில் பங்கேற்பதைகூட தவிர்த்து வந்தார். இதனால் லிங்காயத்து சாதியினரும் மடாதிபதிகளும் பாஜக மேலிடத்தின் மீது அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் பாஜகவின் ஆட்சி குழு மாற்றியமைக்கப்பட்டு, எடியூரப்பாவுக்கு அதில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
வரும் 2023ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் எடியூரப்பாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக எடியூரப்பாவின் லிங்காயத்து சாதியினரின் வாக்குகளை குறிவைத்தே அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் அவரது ஆதரவு பாஜகவுக்கு தேவைப்படுகிறது. எனவே அவரை மீண்டும் முழு நேர அரசியலுக்கு பாஜக மேலிடம் அழைத்து வந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்டோர் பெங்களூருவில் எடியூரப்பாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது பசவராஜ் பொம்மை கூறுகையில், ”மூத்த தலைவரான எடியூரப்பாவுக்கு பாஜக மேலிடம் முக்கிய பொறுப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எடியூரப்பாவின் அனுபவமும் செல்வாக்கும் பாஜகவுக்கு மேலும் பலம் சேர்க்கும். வரும் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலில் எடியூரப்பா பாஜகவின் வெற்றிக்கு பெரும் உதவி புரிவார் என நம்புகிறேன்” என்றார்.