தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள வல்லம் குவாரி சாலையை ‘தமிழ் வழிச்சாலை’யாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, ரூ.10 கோடியில் அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூரில் குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முதல் புதிய பேருந்துநிலையம் வரை உள்ள வல்லம் குவாரி சாலை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
40 அடி அகலம் கொண்ட இந்த சாலையில் இருபுறமும் பேவர் பிளாக்குகள் பதிக்கப்பட்ட நடைபாதை, சோலார் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றுடன், சாலை மையத்தடுப்பில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு, அதன்மேல் 3 அடி உயரத்துக்கு எவர்சில்வர் குழாய்களை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சாலைக்கு ‘தமிழ் வழிச் சாலை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் கூறியது, ‘தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும். நகரில் பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இதில், 4 கி.மீ தொலைவுக்கு ஒரே நேராகச் செல்லும் வல்லம் குவாரி சாலை ரூ.10 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சாலைக்கு ‘தமிழ் வழிச் சாலை’ என்று பெயரிட மாநகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளோம்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலைய சாலை ஒரு வழிச்சாலையாக பயன்படுத்தப்படும்போது, இந்த சாலையில் வாகனங்கள் அதிகளவில் செல்லும். எனவே, இதைக் கருத்தில் கொண்டு இந்த சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது” என்றார்.