வாய்க்காலில் சடலமாக மிதந்து வந்த 6 வயது சிறுவனை மீட்டு காவல் ஆய்வாளர் முதலுதவி செய்து காப்பாற்ற முயன்ற நிலையில் சிறுவன் ஏற்கெனவே இறந்து வந்தது தெரிய வந்துள்ளது.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள உக்கரம் குப்பன் துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் நீரில் சிறுவன் ஒருவன் மிதந்து வருவதாக கடத்தூர் காவல்துறையினருக்கு அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வாய்க்காலில் மிதந்து வந்த சிறுவனை வாய்க்காலில் இருந்து மீட்டனர்.
அப்போது சம்பவ இடத்தில் இருந்த கடத்தூர் காவல் ஆய்வாளர் துரைப்பாண்டியன் முதலுதவி செய்தால் சிறுவன் பிழைக்க வாய்ப்புள்ளதாக கருதி அந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
ஆனால் முதலுதவி சிகிச்சை பயன் அளிக்காத நிலையில் நீரில் மூழ்கி சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டிருக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வாய்க்காலில் மிதந்து வந்த சிறுவனைப் பற்றி அப்பகுதியில் யாருக்கும் தெரியாததால் அச்சிறுவன் யார் என்பது குறித்தும் எப்படி வாய்க்காலுக்கு வந்தார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுவன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM