பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே சேர்ந்து நடித்த ‘லிகர்’ படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியானது. இப்படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தெலுங்கு மற்றும் இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

கடந்த மாதம் இப்படத்தின் வெளியீட்டையொட்டி பிரபல இந்தி நிகழ்ச்சியான ‘காஃபி வித் கரண்’-ல் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முகம் சுளிக்கும் வண்ணம் உடலுறவு பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகள் பேசுபொருளாகி இருந்தது. இதையடுத்து சமீபத்தில் அனன்யா பாண்டே ஹைதராபாத்தில் உள்ள தேவரகொண்டாவின் வீட்டில் நடந்து பூஜை ஒன்றில் கலந்துகொண்டார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகின. சென்று வந்ததை தவறாக பலரும் ட்ரோல் செய்தனர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை அனன்யா பாண்டே தன்னை சமூகவலைதளங்களில் கேலி செய்வது பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இது பற்றிப் பேசிய அனன்யா பாண்டே, “எனது ஆரம்பக்காலங்களில் இருந்து இது போன்ற சமூகவலைதளங்களில் வரும் ட்ரோல்களை எதிர்கொண்டிருக்கிறேன். பல சமயங்களில் அதைக் கடந்து சென்றாலும், சில சமயங்களில் அது என்னை பாதித்ததுண்டு. சமூகவலைதளங்களில் என்னைப் பற்றிய எதிர்மறையான விஷயங்களைப் படிக்கும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கும். ஆனால் நான் அதைக் கடந்து செல்லவே முயற்சிப்பேன். மேலும், ஒரு நடிகையாக என்னை மேம்படுத்திக் கொள்ள அதிக கவனம் செலுத்த முயற்சிக்கிறேன். அதேசமயம் என்னைச் சந்தேகிக்க, விமர்சிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்று நினைக்கிறன்” என்று கூறினார்.