ஆம்பூர் அருகே வீட்டின் மேல் சுவர் இடிந்து விழுந்;த விபத்தில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர், கட்டட மேஸ்திரியான இவருக்கு வாணி என்ற மனைவியும் வர்ஷினி (3) என்ற பெண் குழந்தையும் 1 வயதில் மற்றொரு பெண் குழந்தை இருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 41.00 மில்லி மீட்டர் கனமழை பெய்த நிலையில் சுரேந்தரின் வீடு கன மழையால் வலுவிழந்து வீட்டின் மேல்பக்க சுற்றுச் சுவர் இடிந்து வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த வர்ஷினி மீது விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்துக் கொண்டிருந்த போதே சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM