நடிகர் மாதவன் ‘ராக்கெட்ரி’ படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை, மாதவனே இயக்கி நடித்தார். பெரும் முயற்சிக்குப் பிறகு உருவான இந்தப் படம் ஜூலை 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸானது. தமிழகத்தின் தியேட்டர் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டது. தியேட்டரில் ரிலீஸான இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான படம் என்பதால், இயல்பாகவே ரசிகர்களின் வரவேற்பை பார்க்க முடிந்தது.
முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்தை பார்த்து, தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்த பிறகு நடிகர் மாதவன் மற்றும் நம்பி நாராயணன், படக்குழுவினர் உள்ளிட்டோரை நேரில் அழைத்து பாராட்டினார். இயக்குநராக அறிமுகமான மாதவனுக்கு இந்தியா முழுவதும் பெரும் ஆதரவும் வரவேற்பையும் திரைப்பிரபலங்கள் கொடுத்தனர். மேலும், பட புரோமோஷனுக்காக பெரும் முயற்சிகளையும் அவர் எடுத்தார். அவரின் தொடர் முயற்சியின் காரணமாக படம் பெரும் வெற்றியை பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ராக்கெட்ரி நல்ல வசூலை பெற்று பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டாக மாறியது.
— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 17, 2022
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராக்கெட்ரி படத்திற்காக மாதவன் தன்னுடைய வீட்டை அடமானம் வைத்ததாக செய்திகள் பரவின. தீயாக பரவிய இந்த செய்தி மாதவனின் கவனத்துக்கும் சென்றது. உடனடியாக ரியாக்ட் செய்த மாதவன், ராக்கெட்ரி படத்திற்காக தான் வீட்டை எல்லாம் இழக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இப்போது என் வீட்டில் தான் இருக்கிறேன் என கூறியிருக்கிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் படம் நல்ல வசூலைப் பெற்று வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், படத்தில் பணியாற்றியவர்கள் இந்த ஆண்டு அதிக வருமான வரி கட்டுவார்கள் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மாதவனின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.