ஐதராபாத் : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன்.
இந்தப் படம் பாகுபலி படங்களின் பிரம்மாண்டத்தை முறியடிக்கும் என்று அனைவரும் கணித்து வருகின்றனர்.
இதை நிரூபிக்கும்வகையில் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அமைந்துள்ளன. இன்றைய தினம் படத்தின் சோழா சோழா என்ற இரண்டாவது பாடல் ரிலீசாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் படம்
லைகா மற்றும் மெட்ராக் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் பொன்னியின் செல்வன். வரலாற்று புதினங்களை சிறப்பாக கொடுத்த எழுத்தாளர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு இந்தப்படம் வெளியாகவுள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது பொன்னியின் செல்வன்.

பொன்னியின் செல்வன் நாவல்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் அனைவரும் சோழர்களின் காலகட்டத்தில் போய் வாழும் கற்பனையை பெற்றார்கள். அந்த வகையில் அனைவரின் விருப்பத்திற்குரிய பொன்னியின் செல்வன் நாவல், எல்லோருக்கும் பேவரிட்தான். இந்த நாவலை படமாக எடுக்க முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர் முதற்கொண்டு அனைவரும் முயற்சித்தனர்.

மணிரத்னத்திற்கு கைகூடிய படம்
ஆனால் இந்த முயற்சி தற்போது மணிரத்னத்திற்குதான் கைக்கூடியுள்ளது. இந்தப் படத்தை எடுக்க மணிரத்னமே முன்னதாக மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. இந்நிலையில் தற்போது இந்த கதை, படமாக உருவாகியுள்ளது. நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளம் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமான வெளியீடுகள்
இவர்களை சிறப்பாக பயன்படுத்தி படத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தின் பிரம்மாண்டம் தற்போது டீசர் மற்றும் பாடல்களில் வெளிப்பட்டுள்ளது. டீசர் மற்றும் பாடல்களின் வெளியீட்டிலும் படக்குழுவினர் பிரம்மாண்டம் காட்டி வருகின்றனர். சென்னையில் டீசர் மற்றும் முதல் பாடலான பொன்னி நதியை பிரம்மாண்டமாக வெளியிட்டனர்.

ஐதராபாத்தில் 2வது பாடல் வெளியீடு
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் இரண்டாவது பாடலான சோழா சோழா பாடலை ஐதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றுவரும் விழாவில் வெளியிட்டுள்ளனர். தமிழில் இந்தப் பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளனர். நிகழ்ச்சியில் கார்த்தி, விக்ரம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். த்ரிஷா ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

140 நாட்களில் சூட்டிங் நிறைவு
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி பிரம்மாண்டமான இந்தப் படத்தின் முதல் பாகத்தை 140 நாட்களில் இயக்குநர் மணிரத்னம் இயக்கி முடித்ததாக பெருமையாக குறிப்பிட்டார். இது சாதாரண விஷயம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ள இந்தப் படம் பெரிய அதிர்வலைகளை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.