30 லட்சம் கேட்கிறார்கள்! அரிய தலமீசியா மேஜர் பாதிப்பால் கலங்கி நிற்கும் ஓசூர் சிறுமி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தலசீமியா மேஜர் என்ற குறைபாடுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வழியின்றி ஏழை கூலித்தொழிலாளி குடும்பம் பரிதவித்து வருகிறது.
தலமீசியா மேஜர் குறைபாடு என்றால் என்ன?
தலசீமியா மேஜர் என்ற குறைபாடு உடைய குழந்தைகள் பிறப்பது என்பது உலகில் பொதுவாக அரபு மற்றும் ஆசியா நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. இந்தியாவிலும் இதுபோன்ற குறைபாட்டுடன் ஆண்டொன்றுக்கு சராசரியாக 15,000 குழந்தைகள் பிறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின் புரதத்தின் அளவு இயல்பை விடக் குறைவான அளவில் இருக்கும் குறைபாடு “தலசீமியா மேஜர்” என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பரம்பரை இரத்தக் கோளாறு ஆகும். பொதுவாக சோர்வு, பலவீனம், மெதுவான வளர்ச்சி இரத்த சோகை, சோர்வு அல்லது பலவீனம், மூச்சுத் திணறல் அல்லது தோல் மற்றும் கண்கள் மஞ்சள் அடைதல் ஆகியவை இதன் அறிகுறிகளாக அமைகின்றன. இந்நோய் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குறைபாடாகவும் மருத்துவத்துறையில் பார்க்கப்படுகிறது.
தாலசீமியா நோய் ஏற்படுத்தும் உடல் பாதிப்புகள் | Thalassemia
தலமீசியாவால் பாதிக்கப்பட்ட ஓசூர் சிறுமி:
இக்குறைபாட்டுடன் ஓசூர் அருகே பேகேப்பள்ளி எழில் நகர் பகுதியில் வசிக்கும், லலிதா – அருள்நாதன் தம்பதியினருக்கு பிறந்துள்ள பூரணி என்கின்ற ஏழு வயது உடைய பெண் குழந்தை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். தர்மபுரி கோட்டப்பட்டி அருகே ஒரு மலை கிராமத்தைச் சார்ந்த அருள்நாதன் ஓசூரில் தங்கி சிறு தொழிற்சாலையில் மாத ஊதியத்திற்காக பணியாற்றி வருகிறார். இவருக்கும் லலிதாவுக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தை உடல் சோர்வு மற்றும் பலவீனம் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனைகளில் அணுகி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தலசீமியா மேஜர் என்ற கொடிய குறைபாட்டால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
image
ஏழு ஆண்டுகளாக ரத்த மாற்று சிகிச்சை:
இதை தொடர்ந்து பெற்றோர் நோய்க்கான சிகிச்சை அளிக்க மருத்துவர்களை அணுகி உள்ளனர். இந்தக் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் அறுவை சிகிச்சையில் வாயிலாக பூரண குணமடைய செய்வதற்கு ஏழு வயது ஆகி இருக்க வேண்டும் என்ற மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அதுவரை குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டுமேயானால் 20 நாட்களுக்கு ஒரு முறை முதுகு தண்டு வடம் வழியாக ரத்த மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ ஆலோசனையின் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக அந்த குழந்தைக்கு ரத்த மாற்று சிகிச்சை மேற்கொண்டு வந்து உள்ளனர் லலிதா- அருள்நாதன் தம்பதியர்.
image
அறுவை சிகிச்சைக்கான பணம் இல்லையே – கலக்கத்தில் பெற்றோர்:
மருத்துவ ரீதியாக இந்நோயில் இருந்து பூரண குணமடைவதற்கு போன் மேரோ (எலும்பு மஜ்ஜை) மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக மட்டுமே சாத்தியம் என்பதால் தற்பொழுது குழந்தையின் வயது ஏழு ஆண்டுகளைக் கடந்து இருப்பதால் அறுவை சிகிச்சை செய்வதற்கான தகுதியுடன் அந்த சிறுமி இருக்கிறாள். ஏற்கனவே ரத்த மாற்று சிகிச்சைகளை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த நிலையில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள தங்களது குழந்தைக்கு அறுவை சிகிச்சை வாயிலாக முழுமையாக குணமடைய வைக்க குறைந்தபட்சம் 30 லட்சம் ரூபாய் ஆவது செலவாகும் என்பதால் என்ன செய்வதென்பது தெரியாமல் கலங்கி நிற்கின்றனர் பெற்றோர்.
image
அடுத்த குழந்தைகளுக்கும் இதே பாதிப்பு என்பதால் 3 கருக்களை கலைத்தோம்!
அறுவை சிகிச்சை செய்யாமலேயே தொடர்ந்து வருவதால் சராசரியாக 20 வயது வரை மட்டுமே இந்த சிறுமி உயிர் வாழக்கூடும் என்கின்ற நிலையும் உள்ளது. இதோடு மட்டுமில்லாமல் வேறு குழந்தைகளை ஈன்றெடுத்துக் கொள்வதற்கும் தம்பதியர் முயற்சிகள் மேற்கொண்ட பொழுது அந்த குழந்தைக்கு கருவிலேயே இந்த தலசீமியா மேஜர் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் மூன்று முறை கருக்கலைப்பு செய்து விட்டதாகவும். அதனால் மாற்று வழியும் இல்லாது போய்விட்டது என மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர் பெற்றோர்கள்.
image
முதல்வர் ஏதாவது உதவி செய்தால்..!
“தமிழக முதலமைச்சர் ஏராளமான மருத்துவ உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார்கள். எனவே இந்தப் பெண் குழந்தை உடல் நலத்துடன் நீண்ட நெடிய ஆயுளுடன் நலமாக வாழவும், ஒரு பெண் உயிரை காப்பாற்ற வேண்டியும் முதலமைச்சர் இதற்காக ஆகும் மருத்துவ செலவுகளை கருத்தில் கொண்டு அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும்” என கண்ணீர் மல்க பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
–  ம.ஜெகன்நாத், ச.முத்துகிருஷ்ணன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.