புதுடெல்லி: தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தயாராக வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது. 7 நாட்கள் நீடித்த ஏலம் ஆகஸ்ட் 1-ல் முடி வடைந்தது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. மொத்தம் 72,000 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அளவில் ஏலம் போனது.
மொத்தமாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ரூ.87,947 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஏர்டெல் ரூ.43,040 கோடிக்கும், வோடஃபோன் ஐடியா ரூ.18,786 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ரூ.212 கோடிக்கும் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்தன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், இந்தியாவில் விரைவில் 5ஜி பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். மேலும், 4ஜியை விட 5ஜியின் வேகம் பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதையடுத்து 5ஜி சேவையை விரைவிலே மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
5ஜியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தயாராக வேண்டும் என்று தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ இம்மாத இறுதியில் முதற்கட்ட வெளியீட்டை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நாளில் ஒதுக்கீடு கடிதம்
நிறுவனங்களின் நிதிச் சிக்கலைக் குறைப்பதற்காக, ஏலத் தொகையை 20 தவணைகளாக செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், ஏர்டெல் நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கான தவணை ரூ.8,312 கோடியை இப்போதே செலுத்தி விட்டது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கடிதத்தை தொலைத்தொடர்புத் துறை வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கூறுகையில், ‘‘பணம் செலுத்திய சில மணி நேரங்களிலே அலைக்கற்றை ஒதுக்கீடு கடிதம் எங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. என் அனுபவத்தில் இவ்வளவு விரைவாக ஒதுக்கீடு கடிதம் வழங்கப்பட்டது இதுவே முதல்முறை. எந்தச் சிக்கலும், இழுத்தடிப்பும் இல்லாமல் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
தொழில்துறை கட்டமைப்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். இது மிகப் பெரிய மாற்றம். இந்த மாற்றம்தான் இந்தியாவை வளர்ந்த நாடாக ஆகச் செய்யும்’’ என்று தெரிவித்தார்.
ஜியோ நிறுவனம் ரூ.7,865 கோடி, வோடஃபோன் ஐடியா ரூ.1,680 கோடி, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ரூ.19 கோடி தவணைத்தொகை செலுத்தியுள்ளன. இதுவரையில் தொலைத்தொடர்புத் துறைக்கு 5ஜி கட்டணமாக, நிறுவனங்கள் மொத்தமாக ரூ.17,876 கோடி வழங்கியுள்ளன.