நாகர்கோவில்: அஞ்சுகிராமம் அருகே சகோதரருக்கு சொந்தமான நிறுவனத்தில் தகராறு செய்து பணியாளரை தாக்கி மிரட்டியதாக வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜன் உள்பட 25 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் விஜயாபதி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (40). இவர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: நான், குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த கனகப்பபுரத்தில் உள்ள வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தில் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறேன். இந்த கம்பெனியின் உரிமையாளர் ெஜகதீசனுக்கும், அவரது சகோதரர் வைகுண்டராஜனுக்கும் சொத்து சம்பந்தமாக பிரச்னை உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 18.8.2022 அன்று, கம்பெனியில் பணியில் இருக்கும்போது வைகுண்டராஜன் மற்றும் அவருடன் காரில் வந்தவர்கள் அத்துமீறி நுழைந்து, நான் பணியில் உள்ள நிறுவனத்தில் இருந்து இயந்திர பொருட்களை திருட முயன்றனர்.
இதை நான் மற்றும் என்னுடன் இருந்த பணியாளர்கள் தடுத்த போது அவதூறாக பேசி தள்ளி விட்டு தாக்கி காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். எங்களது வாகனத்தின் கண்ணாடியை உடைத்து ரூ.50 ஆயிரம் நஷ்டம் ஏற்படுத்தினர் என கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் அஞ்சுகிராமமம் போலீசார் விசாரண நடத்தி தற்போது வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜன், ராதாகிருஷ்ணன், மாணிக்கம், கந்தைய்யா, திசையன்விளை சுப்பையா, மகாதேவர்குளம் திருமால், சொக்கலிங்கபுரம் பொன்ராஜ், இசக்கிமுத்து, விஜி, மதிக்குமார் மற்றும் பார்த்தால் அடையாளம் தெரியும் 15 நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147, 447, 294 (பி), 324, 427, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். முத்துகிருஷ்ணன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.