நீண்ட நாள்களுக்குப் பிறகு, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடமிருந்து எடப்பாடி பழனிசாமியை உயர்த்திப் பேசி வார்த்தைகள் வந்து விழுந்தன. சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியும் நானும் நன்றாகத்தான் கட்சியை வழிநடத்தினோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். கசப்புகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும்” என்று எடப்பாடிக்கு தூது அனுப்பினார் பன்னீர். அடுத்த சில மணிநேரத்திலேயே, “பன்னீருடன் எந்த இணைப்பும் கிடையாது” என எடப்பாடி தூது படலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
ஜூன் 14-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்தான், கட்சியின் ஒற்றைத் தலைமை குறித்தான விவாதம் முதன்முதலாக எழுந்தது. அதிலிருந்து ஒருவாரத்துக்கு பன்னீருடன் சமாதானம் பேச எடப்பாடியின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராகப் படையெடுத்தனர். செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் எனக் கட்சியின் முக்கியஸ்தர்களை பன்னீர் வீட்டுக்கு அனுப்பினார் எடப்பாடி.
எந்த சமரசத்தையும் பன்னீர் அப்போது ஏற்கவில்லை. எடப்பாடியும் ஒருகட்டத்தில் சமரசம் பேசுவதை நிறுத்திவிட்டார். இப்போது, பன்னீர் சமரசம் பேசவரும் நிலையில், அதற்கு எடப்பாடி மறுப்பு தெரிவித்திருக்கிறார். ‘எடப்பாடி மறுத்த பின்னணி என்ன?’, விவரமறிய அ.தி.மு.க வட்டாரங்களில் பேச்சுக் கொடுத்தோம்.
நம்மிடம் பேசிய எடப்பாடி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், “சமரசம் என்கிற பெயரில், கட்சியில் மீண்டும் இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறார் பன்னீர். ஒருபடி மேலாக, வழிகாட்டுதல் குழுபோல ஒரு குழுவை உருவாக்கி, அந்தக் குழுவுக்கு கட்சியின் வேட்பாளர், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கவும் திட்டமிடுகிறார். இதையெல்லாம் எடப்பாடியால் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும். சமரசம் பேசுவதற்கான காலக்கட்டத்தை அ.தி.மு.க தாண்டிவிட்டது. எடப்பாடி தலைமையை ஒற்றைத் தலைமையாக ஏற்றுக்கொள்வதாக இருந்தால், சமாதானம் பற்றிப் பேசலாம். அதற்கு பன்னீரும், அவருடன் இருக்கும் ஒரு சிலரும் உடன்படுவார்களா?
‘ஒற்றைத் தலைமை’-க்கு ஆதரவாக 2,532 பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் அளித்திருக்கின்றனர். 95 சதவிகித மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடிக்கு அதரவாக நிற்கிறார்கள். உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் பன்னீரின் தோல்வி தள்ளிப் போயிருக்கிறது. நாளையே, பொதுக்குழு கூட்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டால், எடப்பாடியால் அதைச் சாதித்துக் காட்டமுடியும். பன்னீருக்கு பலம் எங்கே இருக்கிறது. தென்காசி மாவட்டத்திலிருந்து ஒரே ஒரு பொதுக்குழு உறுப்பினரான மனோஜ் பாண்டியன் மட்டும் அவர் வசம் நிற்கிறார். பன்னீரின் சொந்த மாவட்டமான தேனியிலேயே 50 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இவ்வளவு ஆதரவையும் தன் பக்கம் வைத்துக்கொண்டு, பன்னீரிடம் இறங்கிப் போக வேண்டிய அவசியம் எடப்பாடிக்கு இல்லை.
தவிர, ‘அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை தொடர்ந்தால்தான் பா.ஜ.க-வுக்கு லாபம்’ என டெல்லி சீனியர்களைக் குழப்பிவிடப் பார்க்கிறார் பன்னீர். அவர் முயற்சிக்கு டெல்லி இதுவரை பணியவில்லை என்பது தனிக்கதை. அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை இனி சாத்தியமில்லை. அ.தி.மு.க-வுக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலைவிட, 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானது.
சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கு ஒற்றைத் தலைமை அவசியம். இப்போது, ‘மீண்டும் இணைவோம். கசப்புகளை மறப்போம்’ என்று பன்னீர் விடும் ராக்கெட்டுகள் எல்லாம், நாளைக் கட்சி ஒருவேளை சறுக்கலைச் சந்தித்தால், ‘அந்தச் சறுக்கலுக்கு நான் பொறுப்பல்ல. இணைவோம் என்று நான் அப்போதே சொல்லிவிட்டேன். எடப்பாடிதான் மறுத்துவிட்டார்’ என்று காரணங்களை அடுக்கத்தான் ஏவப்படுகிறது. இந்தச் சூட்சமம் எங்களுக்குப் புரியாமல் இல்லை.
இரட்டை இலையே முடங்கினாலும் சரி, கட்சியின் வாக்கு வங்கி சரிந்தாலும் சரி… ஒற்றைத் தலைமை என்பதில் மாற்றமில்லை. புதிய சின்னத்தை ஒரே இரவில் கிராமங்கள்தோறும் வரைவதற்கு எங்களிடம் கிளை அமைப்புகள் இருக்கின்றன. அ.தி.மு.க-விலிருக்கும் கிளைக்கழக கட்டமைப்பு போல, தமிழ்நாட்டில் வேறெந்த கட்சியிடமும் இல்லை. அந்தக் கட்டமைப்பை யாராலும் சிதைக்க முடியாது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற எடப்பாடி அவசியம். அதை டெல்லி உணரும் சமயத்தில், காட்சிகள் தலைகீழாக மாறிவிடும்” என்றனர் விரிவாக.
‘அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முறையே தொடரும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது சறுக்கல்தான் என்றாலும், அதை எதிர்கொள்வதில் தீவிரமாக இருக்கிறது எடப்பாடி தரப்பு. தனக்குச் சாதகமாக தீர்ப்பு வெளியானவுடன், குலதெய்வ கோயிலுக்கு படையல் போட ஶ்ரீவில்லிபுத்தூர் கிளம்பிவிட்டார் பன்னீர். உயர் நீதிமன்ற அமர்வு, தேர்தல் ஆணையம் என அ.தி.மு.க விவகாரம் அடுத்தடுத்துச் செல்லவிருக்கிறது. அதிலெல்லாம் தனக்குச் சாதகமாகவே தீர்ப்புகள் வருமென திடமாக நம்புகிறாராம் அவர். இதற்கிடையே, எடப்பாடி பக்கமிருக்கும் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்களை பன்னீர் பக்கம் இழுத்துவர வைத்திலிங்கம் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. பன்னீரின் முயற்சிகள் அவருக்கு வெற்றியைத் தருமா, அல்லது எடப்பாடியின் தன்னம்பிக்கை அவர் பக்கம் வசந்த காற்றைத் திருப்புமா என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்.