எங்கள் வீடு 20 வருடங்களுக்கு முன் மிகவும் பணக்கார குடும்பம். அப்பா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தொழில் செய்து முன்னேறியவர். அக்கா, நான் என்று இரண்டு பெண் பிள்ளைகள். திருமணமாகி ஒரு வருடத்தில் அக்கா பிறக்க, அதை தொடர்ந்த வருடங்களில் அப்பாவுக்கு தொழிலில் புலிப்பாய்ச்சல்.
அக்கா பிறந்து 10 வருடங்கள் கழித்து நான் பிறந்தேன். மகனை எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் ஒரு மகள் பிறந்ததிலேயே, என் குடும்பத்துக்கு என் மீதான அன்பில் பாரபட்சம் தொடங்கிவிட்டது.
இந்நிலையில், தொழிலில் அப்போது ஓஹோ என்று இருந்த அப்பாவுக்கு, எதிர்பாராத விதமாக பெருத்த நஷ்டம். அப்போது நான் 10 மாதக் குழந்தை. ஜோசியக்காரர் ஒருவர், ‘உங்கள் மூத்த மகள் பிறந்த நேரம், நீங்கள் ஒவ்வொரு படியாக ஏறி 10 வருடங்களில் உச்சம் தொட்டீர்கள். ஆனால், உங்கள் இளைய மகள் பிறந்த நேரம், இனி அவள் ஒவ்வொரு வயதாக வளரும்போதும் உங்கள் ஒவ்வொரு சொத்தும் உங்களை விட்டுப் போகும்’ என்றிருக்கிறார்.
அடுத்தடுத்த வருடங்களில் அப்பாவுக்கு தொழிலில் நிமிரவே முடியவில்லை. வருமானம் நின்று போனதுடன் நஷ்டமும் போட்டு புரட்ட, ஒவ்வொரு சொத்தாக எங்கள் கைவிட்டுப் போனது.10 வருடங்களில், எல்லாம் இழந்து, இருப்பதற்கு ஒரு சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் குடியேறினோம். என் அம்மா வீட்டில் எங்கள் மாமா இருவரும் என் அம்மாவுக்கு ஒரு சிறிய வீட்டையும், தொகையையும் கொடுத்து, ‘உன் கணவர் தொழிலை சரியாக கவனிக்காமல் கைவிட்டு அனைத்தையும் இழந்துவிட்டார். எங்களால் முடிந்ததை கொடுத்துவிட்டோம், இனி எந்த உதவியும் எதிர்பார்த்து எங்களிடம் வராதே’ என்று சொல்லிவிட்டனர்.
இப்போது அக்காவுக்கு 30 வயது, எனக்கு 20 வயது. அக்காவுக்கு, ஒரு நல்ல இடத்தில் மணம் முடித்து நன்றாக இருக்கிறார். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். இந்நிலையில், எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து என்னை ‘அதிர்ஷ்டம் கெட்டவ’ என்று ஊர், உறவுகள் சொன்னதையே கேட்டு கேட்டு வளர்ந்து, என்னை எனக்கே பிடிக்காமல் போய்விட்டது. ‘உங்க அக்கா பிறந்த நேரம், உங்க அப்பாவை எங்கேயோ கொண்டுபோனது. ஆனா நீ பொறந்து, உங்க அப்பாவை ஆண்டி ஆக்கிட்ட’ என்பதை, இதுவரை பல நூறு முறை பலர் சொல்லக் கேட்டுவிட்டேன். கூடவே, ‘உங்க அக்கா அதிர்ஷ்டக்காரி, கஷ்டத்துலயும் நல்ல மாப்பிள்ளை கிடைச்சு போயிட்டா. ஆனா உனக்கு கல்யாணத்துலயாச்சும் உன்னை பிடிச்ச தரித்திரம் விலகுதா தெரியல’ என்றெல்லாம் பேசுவார்கள்.
என் பெற்றோர், என்னை அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்பவர்கள் வாயை அடைக்கும் வகையில் இதுவரை ஒரு வார்த்தை சொல்லியதில்லை. என் அப்பா, தன் திறமையின்மையால், தவறான அணுகுமுறையால் தொழிலை தொலைத்தார். ஆனால், அதை ஏற்றுக்கொள்வதைவிட, விதியின் மேலும், என் மேலும் அந்த பழியைப் போடுவது அவருக்கு சௌகர்யமாக இருபதாகத் தோன்றும்.
கல்லூரியில் சேர்ந்த பிறகு, என் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதில் எனக்கு நிறைய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. தோழிகள், பேராசிரியர்கள் என ஒரு பாசிட்டிவ் சூழல் கிடைத்திருக்கிறது. ஆனால் வீட்டில், ஊரில், உறவில் என்னை ‘அதிர்ஷ்டம் கெட்டவ’ என்று சொல்லிச் சொல்லி என்னை தவிடுபொடியாக்குகிறார்கள். எப்படி மீட்பேன் என்னை?