செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் கேட்டரிங் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். அவரது கடைக்கு வெளியே பழைய இரும்பு பொருட்களை கொட்டி கிடப்பது வழக்கம். இரவு நேரத்தில் அதை நோட்டமிட்ட நபர் ஒருவர், இரும்பு பொருட்களை திருடி சென்றுள்ளார். அதைக் கண்டு, அந்த கடையில் பணி புரியும் செக்யூரிட்டி ஒருவர் அவரை பின்தொடர்ந்து, அவரிடம் இருந்து அந்த இரும்பு பொருட்களை மீட்டிருக்கிறார். பின்னர், அவரை அழைத்துக் கொண்டு திருடிச்சென்ற இரும்பு கம்பிகளுடன் கேட்டரிங் நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர், சம்பவம் தொடர்பாக அந்த ஊழியர் அவரது முதலாளியிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். உடனே கடைக்கு கிளம்பி வந்த சேகர், பிடிபட்ட நபரிடம் விசாரித்திருக்கிறார். அதில், தான் வேலூரைச் சேர்ந்தவர் என்றும், பிழைப்புக்காக செங்கல்பட்டு வந்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும், குப்பைகள் அள்ளும் தொழில் செய்வதாகவும் பசியால் காசுக்காக இரும்பு பொருட்களை திருடியதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட அந்த முதலாளி, இனி இதுபோல் திருடக்கூடாது என அறிவுரை கூறி, பசியை போக்க திருடிய அந்த நபருக்கு உணவு வாங்கி கொடுத்தார்.
அதுமட்டுமின்றி எப்பொழுது உணவு வேண்டுமென்றாலும் இங்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் திருட்டு சம்பவத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கியிருக்கிறார். திருட சென்ற நபர் மீது கோபம் கொள்ளாமல் அவருக்கு அறிவுரை வழங்கியதோடு அவருக்கு உணவளித்த சம்பவம் பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.