அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கம் – ஜனாதிபதி தெரிவிப்பு

உலகில் ஏனைய நாடுகள் வெற்றிகளுடன் நாளுக்கு நாள் முன்னோக்கிச் செல்லும் போது, ​​நாம் ஒன்றிணைந்து செயற்படாததால் எமது நாடு பின்னோக்கிச் செல்வதாகவும், அந்த வரலாற்றுத் தவறை திருத்தி நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே எனது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

இன்று (20) வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், பிற்பகல் அனுராதபுரம் சம்புத்த ஜயந்தி மகா விகாரைக்கு சென்று வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி வண. நுகேதென்ன பஞ்ஞானந்த நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

பிரித் பாராயணம் செய்து  ஜனாதிபதி அவர்களை ஆசிர்வதித்த நாயக்க தேரர், அரசாங்கத்தின் எதிர்வரும் வேலைத்திட்டத்திற்கு தமது ஆசிகளைத் தெரிவித்தார்.

நாட்டில் ஒழுக்கத்தை கட்டியெழுப்புவதே முதல் பணி என சுட்டிக்காட்டிய நுகேதென்ன பஞ்ஞானந்த நாயக்க தேரர், ஒழுக்கம் இல்லாத நாடு ஒருபோதும் முன்னோக்கிச் செல்லாது எனவும் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களைப்போன்று ஆசிரியர்களுக்கும் ஒழுக்கம் இருக்க வேண்டும் எனவும், சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்த போது, ​​ஆசிரியர் தொழிலின் ஒழுக்கம் அழிந்துள்ளதாகவும் தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கடந்த கால நிகழ்வுகளால் சமூகத்தில் சீர்குலைந்துள்ள ஒழுக்கத்தை மீளமைக்கப் பாடுபடும் ஜனாதிபதி அவர்களுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் ஜேதவனாராம  விகாராதிபதி வண. இகல ஹல்மில்லேவே ரதனபால நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம், நாட்டை அபிவிருத்தி செய்யும் ஒரு கூட்டு வேலைத்திட்டத்தை அனைத்து மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அந்தப் பொறுப்பை தாமதமின்றி நிறைவேற்றுவதற்குத் தலைமை ஏற்குமாறும், தேரர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒன்றிணைந்து செயற்பட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டிய அவர், விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குமாறும்  கேட்டுக் கொண்டார்.

 பின்னர் அபயகிரிய ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், விகாராதிபதி வண.  கல்லஞ்சியே ரதனசிறி நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

பிரதேச மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் இனங்கண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் சீகிரியா போன்ற புராதன நகரங்களை அண்மித்த பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை தங்கவைக்கும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இசுறுமுனிய ரஜமஹா விகாரைக்குச் சென்று வண. மதவ சுமங்கல நாயக்க தேரரை தரிசித்து ஆசி பெற்றார்.

“இருபுறமும் எரியும் தீபத்தைப் போல” நாடு இருந்த வேளையில் ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றதை நினைவுகூர்ந்த தேரர், அந்தத் தீப்பிழம்புகளை அணைத்து மக்களின் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வலிமையும் தைரியமும் தாராளமாகக் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்

இசுறுமுனிய பழைய விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களுக்கு மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கியதுடன், அங்கு வருகை தந்திருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் ஜனாதிபதி அவர்கள் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

அநுராதபுரம் ஸ்ரீ சாராநந்த மகா பிரிவேனாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், வண. அடபாகே விமலஞான தேரர் தலைமையிலான மகா சங்கத்தினருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-20

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.