சென்னை : தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகாலமாக ஹீரோயினாக நடித்து வருபவர் த்ரிஷா. ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ் என கிட்டதட்ட அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் த்ரிஷா.புகழின் உச்சியில் உள்ளார் த்ரிஷா.
படங்களில் நடிப்பதுடன் சமூக நலனுக்காக செயல்படும் சில என்.ஜி.ஓக்களுக்கு விளம்பர தூதராகவும் த்ரிஷா செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் த்ரிஷாவை 36 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
கடைசியாக பரமபத விளையாட்டு என்ற படத்தில் த்ரிஷா நடித்திருந்தார். தற்போது இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களில் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30 ம் தேதியும், சதுரங்க வேட்டை 2 அக்டோபர் 7 ம் தேதியும் ரிலீசாக உள்ளன.
தற்போது ராம் முதல் பாகம், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், தி ரோட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.மலையாளம், தமிழில் பிஸியாக நடித்து வரும் த்ரிஷா, விரைவில் அரசியலில் குதிக்க போவதாக மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது.
இது பற்றி எந்த உறுதியான தகவல் அல்லது அறிவிப்பு த்ரிஷா தரப்பில் இருந்து வெளியிடப்படாத நிலையில் த்ரிஷாவின் அரசியல் பிரவேசம் பற்றிய பல தகவல்கள் காட்டுத்தீ போல் சோஷியல் மீடியவில் பரவி வருகிறது.
அதுவும் த்ரிஷா, தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும், த்ரிஷா அரசியலில் சேருவதற்கு நடிகர் விஜய் ஆதரவு அளித்து, ஊக்கமளித்து வருவதாக வேறு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த தகவல் உண்மையா, இல்லையா என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.
த்ரிஷா அரசியலில் இணைய போவதாக ஒரு தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், விக்கிப்பீடியாவில் த்ரிஷா, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது மற்றொரு குழப்பத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தி உள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகள் பிஸியாக வேறு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள்.
அதன் டைரக்டர் மணிரத்னத்தின் விக்கிபீடியா பக்கத்திலேயே பொன்னியின் செல்வன் முதல் பாகம் பற்றி மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் பற்றி எதுவும் சொல்லப்படாத நிலையில் த்ரிஷாவிற்கு மட்டும் பொன்னியின் செல்வன் 2 பணிகளை முடித்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா பக்கத்தை யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் என்பதால் இது உறுதியான தகவல் என்றே சொல்லலாம்.