அரச அதிகாரிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிப்பது, அரசு ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு திறம்பட அனுப்பும் செயல்முறையைத் துரிதப்படுத்துவது, இதனுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் அண்மையில் நடந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் முறைமையை, இலகுபடுத்தும் வகையில் 14/2022 ஆம் இலக்க அரச நிர்வாக சுற்றறிக்கையை திருத்துவது உட்பட 06 விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பொது நிர்வாக சுற்றறிக்கையை திருத்துவதன் மூலம், பணம் அனுப்புவதற்கு, வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு (NRFC) அல்லது ரூபாய் கணக்கைப் பயன்படுத்த அனுமதிப்பது, விதவைகள், விதுரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்திற்கு கிடைக்கும் பங்களிப்புகளுக்கு அமைய , வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணைகளை செலுத்துவதற்காக அந்த பணத்தை தொடர்புபடுத்தும் முறையான நடைமுறைகளை நிறுவுதல் என்பன குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
பொது நிர்வாகச் சுற்றறிக்கையை திருத்துவதன் மூலம் 03 மாதங்களுக்கு ஒரு முறையாவது பணத்தை அனுப்ப வாய்ப்பு காணப்படுவதோடு எமது நாட்டில் பணம் பற்று வைக்கப்படும் வகையில் அரச உத்தியோகத்தரின் பெயரில் கணக்கைத் திறக்கவோ, கூட்டுக் கணக்கைத் திறக்கவோ (Joint account) அல்லது பணம் அனுப்ப கணக்கொன்றை தெரிவு செய்யவோ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் அரச ஊழியர்களுக்கு உகந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை துரிதமாகக் கண்டறிந்து, விண்ணப்பங்களை உரிய தரப்பினருக்கு அனுப்பி, சாத்தியமான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை தொடர்ச்சியாக அடையாளம் காணவும் இலக்கு குழுக்களுக்கு அதனை முன்வைக்கவும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தின் கீழ், அரச சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பரந்தளவில் திறம்படப் பயன்படுத்தி, வெளிநாட்டு புலமைப்பரிசில்கள் மூலம் வெளிநாட்டில் கல்வி கற்பதை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், வெளிநாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை முறைப்படுத்த, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளை ஓய்வூதிய திணைக்களத்தின் பயன்பாட்டுக்கு திறந்து விடுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அரசு ஊழியர்கள் விடுமுறை பெறுவதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து நிறுவனத் தலைவருக்கு அறிவுறுத்தல் மற்றும் காலக்கெடுவை வழங்குவது குறித்தும், விடுமுறை அனுமதியில் தாமதமாகும் விண்ணப்பங்களுக்காக ஒன்லைன் மேல்முறையீட்டு முறையை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
விடுமுறைக்கான அனுமதி வழங்க முன்னர், விதவைகள், விதுரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியப் பங்களிப்புகள் மற்றும் வங்கிக் கடன்கள் என்பவற்றை திட்டமிட்டபடி பெற்றுக்கொடுப்பதை உறுதிப்படுத்தும் முறைமையொன்றை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை விடுத்தார்.
வெளிநாட்டு புலமைப்பரிசில் மூலம் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளை ஊக்குவிக்கவும் திட்டம்
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கு ஏற்றவகையில் அரசு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த, அவர்களின் பல் வகை செயல்திறனைக் கருத்தில் கொள்ளவும் வெற்றிடம் காணப்படும் துறைகளின் குறுகிய கால தேவைகளை அடையாளம் காணவும் அந்த பாடநெறிகளுக்கு அரசு ஊழியர்களை ஈடுபடுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. அரச அதிகாரிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் தொடர்பில் மீளாய்வு செய்வது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஈ.விமலவீர, தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஏ. குமாரசிறி, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிரன்சா களுதந்திரி, மத்திய வங்கி பணிப்பாளர் கலாநிதி பி.எச்.பி.கே. திலகவீர, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டி.பி. சேனநாயக்க, ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிறுவனப் பணிப்பாளர் நாயகம் சந்தன குமாரசிங்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022-08-19