கடந்த சில தினங்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது டெல்லி அரசியல். தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் கல்வி கொள்கையை பாராட்டி கட்டுரை ஒன்று வெளிவந்ததற்காக டெல்லி கல்வி துறை அமைச்சரும் துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா கட்டம் கட்டப்பட்டதாக கூறியது அரசியல் வட்டாரம்.
இதனை அடுத்து அவர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்து அதிரடி சோதனைகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் பட்டியல் என சிலரின் பெயர்களை வெளியிட்டது சிபிஐ. இதில் சில அரசு அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றது பலரை அதிர்ச்சி அடைய செய்தது.
இதற்கு காரணமாக டெல்லியில் புதிய மது கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு என்று பாஜக குற்றம்சாட்டியதை அடுத்து சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்தது. வழக்கத்திற்கு மாறாக மது விற்பனை உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 15 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். 14 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனை இன்று காலை நிறைவடைந்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை மேலும் தொடர்கிறது.
சிபிஐ விசாரணையில் முறைகேடு புகாருக்கு உள்ளாகியுள்ள மணிஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவிற்கும் எதிராக கண்டன குரல் எழுப்பியவாறு டெல்லி காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர். அமைச்சரவையில் இருந்து சிசோடியாவை நீக்க வேண்டும் என்றும் டெல்லி காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.இது டெல்லி அரசியலையே சூடு ஏற்றி உள்ளது. எதிர்வரும் குஜராத் தேர்தலை மனதில் வைத்து இது ஆம் ஆத்மி மீதி நடத்தப்படும் தாக்குதல் எனவும் ஆம் ஆத்மி சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இது டெல்லியில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.