இமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பு: கனமழை, நிலச்சரிவில் சிக்கி 22 பேர் சாவு; 6 பேர் மாயம்

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பல இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. சில மணி நேரத்தில் அதிக அளவில் மழை பெய்ததால் அந்த பகுதி முழுவதும் வெள்ளம் கரைபுரண்டது. குறிப்பாக காங்ரா, மாண்டி, ஹமிர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. ஆறுகள், கால்வாய்கள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மண்ணில் புதைந்த வீடுகள்

இந்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் வீடுகள், கால்நடை கொட்டகைகள் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டன. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்தன.

அத்துடன் சாலைகள், பாலங்கள் போன்ற கட்டுமானங்களும் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தன. இதனால் ரெயில் மற்றும் சாலை போக்கு வரத்து முடங்கியுள்ளன. நிலச்சரிவால் பாறைகள் விழுந்து ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்பட்டதாலும், நிலச்சரிவில் புதையுண்டதாலும் உயிரிழப்புகளும் கணிசமாக நிகழ்ந்தன.

கால்நடைகள் உயிரிழப்பு

அந்தவகையில் மாண்டி, சம்பா, காங்ரா மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், நிலச்சரிவில் சிக்கியுமாக 22 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரும் அடங்குவர். மாண்டி மாவட்டத்தில் மட்டுமே 13 பேர் உயிரிழந்து 6 பேர் மாயமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொட்டகைகள் சேதமடைந்ததில் 11 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 10 கால் நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன.

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக சுமார் 740 சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. 1000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளன.

மாநில அரசு நிதியுதவி

இந்த பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ.30 ஆயிரம் மாநில அரசு வழங்கி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. குறிப்பாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநிலத்தில் வருகிற 28-ந்தேதி வரை மிதமான மற்றும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

10 பேர் மாயம்

இதற்கிடையே உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நேற்று அதிகாலையில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. இதனால் டான்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் அடித்து செல்லப்பட்டன.

இந்த ஆற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற குகைகோவிலில் வெள்ள நீர் புகுந்தது. பல வீடுகளில் வெள்ளத்துடன் சேறும் புகுந்து மக்களை அதிகாலையில் பெரும் துயருக்கு உள்ளாக்கியது.

மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10 பேரை காணவில்லை.

ராய்ப்பூர்-குமால்டா சாலை சேறால் மூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைப்போல ரிஷிகேஷ்-பத்ரிநாத், ரிஷிகேஷ்-கங்கோத்ரி உள்ளிட்ட சாலைகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டு உள்ளன. மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அவர் ஜே.சி.பி. எந்திரத்தில் சென்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா, ஜார்கண்டில் பாதிப்பு

இதைப்போல ஒடிசாவிலும் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல நதிகளில் அபாய அளவை கடந்து வெள்ளம் பாய்கிறது.

இங்கும் மழை தொடர்பான சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஜார்கண்டிலும் நேற்று முன்தினம் முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன.

31 பேர் பலி

மேற்கு சிங்பும் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையும் சேர்த்து வட மாநிலங்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.

காற்றில் மின் கம்பங்களும் சாய்ந்ததால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.