இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா? என பிரதமர் மோடிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி விமானநிலையத்தில் 19.5.2018 அன்று மதிமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக, மதிமுக மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு அளித்த புகார் மீதான வழக்கு விசாரணை திருச்சி ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நீதிபதி சிவக்குமார் முன் ஆஜராகினார். விசாரணைக்குப் பின்னர், இந்த வழக்கை ஆக.25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பிறகு நீதிமன்ற வளாகத்தில் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது:
இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா? இலவசம் என்பது ஒருவகையான லஞ்சம். இலவசங்களால் ஒரு புள்ளி அளவுக்குகூட நாடு வளராது. விவசாயிகளை வாழ்நாள் முழுவதும் பிச்சைக்காரர்களாக வைத்துக் கொண்டு, அவர்களுக்கு அவ்வப்போது ரூ.2 ஆயிரம் வழங்குவது எந்த வகையில் நியாயம்? விவசாயிகளை கையேந்தும் நிலைக்கு கொண்டு சென்றது அவமானம்.
காங்கிரஸ், பாஜக ஆகியவை வேறு வேறு கட்சிகள் என்றாலும், கொள்கையில் ஒன்றுதான். தற்போது காங்கிரஸ் கட்சியும் விநாயகர் சிலைகளை வைக்கத் தொடங்கிவிட்டது. சுதந்திரப் போராட்டத்துக்காக 12 ஆண்டுகள் சிறையில் இருந்த ஜவகர்லால் நேருவையும், ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கரையும் பிரதமர் மோடி ஒப்பிட்டு பேசலாமா? இவ்வாறு சீமான் தெரிவித்தார்.