ஜப்பான் நாட்டு அரசு தங்கள் நாட்டு இளைஞர்கள் அதிகம் மது அருந்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், மது நுகர்வை அதிகரிக்க தேசிய அளவிலான போட்டிகளையும் அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானில் கொரோனா தொற்றுக்கு பின்னர் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. இதற்கு இளைஞர்கள் மதுபானம் அருந்துவதை குறைத்துக் கொண்டதுதான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, மதுபான நுகர்வை அதிகப்படுத்தும் Sake Viva எனும் பிரசாரத்திட்டத்தை அந்நாட்டின் தேசிய வரி முகமை அமைப்பு முன்னெடுத்துள்ளது. அதன்படி, மதுபானத்திற்கான தேவையை இளைஞர்களிடையே எவ்வாறு தூண்டுவது என்பது குறித்த விளம்பர முறைகள், தயாரிப்புகள், வடிவமைப்புகள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட யோசனைகளை வழங்கும் அதிகாரப்பூர்வ போட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் அனைத்து ஜப்பானிய மதுவகைகளுக்கான விளம்பர யோசனைகளும் அடங்கும். செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வரை யோசனைகளை வழங்கலாம். டோக்கியோவில் நவம்பரில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக, அக்டோபர் மாதம் நிபுணர்கள் கொண்டு அந்த யோசனைகள் மேம்படுத்தப்படும். அதன் இறுதி திட்ட அறிக்கை நவம்பர் மாதம் அரசுக்கு சமர்பிக்கப்படும் என்று தேசிய வரி முகமை தெரிவித்துள்ளது. வெற்றியாளர்களின் திட்டம் வணிகமயமாக்கப்படுவதற்கான அனைத்து ஆதரவுகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா, பிறப்பு விகிதம் குறைந்தது, வயதானவர்கள் எண்ணிக்கை பெருகியது, வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றால் உள்நாட்டு மதுபான சந்தை சுருங்கி வருகிறது. எனவே, இளைய தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. தொழில்துறைக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் எனவும் தேசிய வரி முகமை தெரிவித்துள்ளது.
பின்லாந்து பிரதமருக்கு போதை மருந்து சோதனை!
அதேசமயம், ஜப்பான் அரசின் இந்த அணுகுமுறைக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஒரே அரசே நாட்டின் குடிமக்களை மதுபானம் அருந்த சொல்வதா என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களை குடிக்க ஊக்குவிப்பது அரசாங்க நிறுவனத்தின் சரியான செயல் அல்ல. குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் நபர்களின் உடல்நல பாதிப்பை இந்த பிரசாரத் திட்டம் கருத்தில் கொள்ளவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ஜப்பானின் சுகாதார அமைச்சகம் கடந்த காலங்களில் அளவுக்கு அதிகமாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ளது. அதிகப்படியான மது அருந்துதல் ஒரு ‘முக்கிய சமூக பிரச்சனை’ என்று கடந்த ஆண்டு ஜப்பான் சுகாதார அமைச்சகம் கூறியது. நுகர்வு மந்தநிலையில் இருந்தபோதிலும் இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. குடிப்பழக்கம் உள்ளவர்களை மதுவுடனான தங்கள் உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறி விட்டு, தற்போது இளைஞர்கள் மது அருந்த ஊக்குவிப்பதா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
அதேசமயம், இந்த பிரசாரத் திட்டம் மது விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களை அதிகளவு மது அருந்த சொல்லி வற்புறுத்தவில்லை என ஜப்பான் தேசிய வரி முகமை விளக்கம் அளித்துள்ளது.
குறைந்த மதுபான விற்பனை
ஜப்பானில் மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. அந்நாட்டின் தேசிய வரி முகமை தரவுகளின்படி, கடந்த 2021ஆம் நிதி ஆண்டில் ஜப்பான் அரசுக்கு கிடைத்த வரி வருவாயில் வெறும் 1.7 சதவீதம்தான் மது விற்பனையில் இருந்து கிடைத்துள்ளது. மது விற்பனை வாரியாக 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலாகியுள்ளது. இது, கடந்த 2011ஆம் ஆண்டில் 3 சதவீதமாகவும், 1980ஆம் ஆண்டில் 5 சதவீதமாகவும் இருந்துள்ளது.
ஜப்பானில் 40 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் தவறாமல் குடிக்கிறார்கள். ஆனால், தங்களது 20களில் இருக்கும் இளைஞர்கள் வெறும் 7.8 சதவீதம் பேர்தான் குடிக்கிறார்கள். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2019 முதல் 2020 வரை மதுவிற்பனை பாதியாக குறைந்துள்ளது என ஜப்பான் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அவசரகால நிலையை 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பான் அரசு நீக்கியது. அதன்பின்னர், உணவகங்கள், மதுபானக் கூடங்கள் திறக்கப்பட்டன. மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், நாட்டின் சில பகுதிகளில் இந்த ஆண்டு மார்ச் வரை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.