மாமல்லபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை அமைத்து வழிபாடு செய்தல், சிலை கரைப்பு நிகழ்வுகள், ஊர்வலங்கள் தொடர்பான அரசின் வழிகாட்டுதல்கள் குறித்து, பல்வேறு அமைப்பு மற்றும் பொதுமக்களுடன் மாமல்லபுரத்தில் நேற்று போலீஸார் ஆலோசனை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடற்கரையோர கிராமங்களின் வழியாக, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படும்.
இதனால், விநாயகர் சதுர்த்தியின்போது, சிலை அமைத்து வழிபாடு செய்வது மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
31-ல் விநாயகர் சதுர்த்தி
இந்நிலையில், வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
இதனால், மாமல்லபுரம் காவல்துணை கோட்டத்துக்கு உட்பட்ட திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம், கூவத்தூா், திருப்போரூர், மானாமதி, காயார் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில், விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டுதல்கள் தொடர்பாக, மாமல்லபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இதில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். அப்போது, வழிகாட்டுதல்கள் குறித்து போலீஸார் விளக்கினர்.
மேலும், போலீஸார் அனுமதிக்கும் சாலை வழியாக மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெற வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.