கடந்த சில தினங்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது டெல்லி அரசியல். தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் கல்வி கொள்கையை பாராட்டி கட்டுரை ஒன்று வெளிவந்ததற்காக டெல்லி கல்வி துறை அமைச்சரும் துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா கட்டம் கட்டப்பட்டதாக கூறியது அரசியல் வட்டாரம்.
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மீது, மதுபான உரிமம் சார்ந்த முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மனிஷ் சிசோடியாவின் வீடு உட்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கடவுள் நம்முடன் இருக்கிறார்”. இது போன்ற சோதனைகளுக்கு ஆம் ஆத்மி கட்சி பயப்படாது. உலகின் சிறந்த கல்வி அமைச்சராக மனிஷ் சிசோடியா திகழ்கிறார் . ஆனால், சிபிஐ அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்துகின்றனர். நியூயார்க் டைம்ஸின் முதல் பக்கத்தில் இடம் பெறுவதும், டெல்லியில் கல்வி புரட்சியை கொண்டு வருவதும் எளிதானது அல்ல.
இது முதல் ரெய்டு அல்ல. கடந்த 7 ஆண்டுகளில், மனிஷ் சிசோடியா மீது பலமுறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. அவர் மீது பல பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. என் மீதும், சத்யேந்தர் ஜெயின் மீதும், கைலாஷ் கெலாட் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டன. ஆனால், சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. இந்த சோதனையிலும் எதுவும் அவர்களுக்கு கிடைக்காது. சிபிஐ தனது வேலையை செய்கிறது.
இதனால் பயப்பட தேவையில்லை. சிபிஐயை அதன் வேலையை செய்ய அனுமதிக்க வேண்டும், எங்களை தொந்தரவு செய்ய மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது. தடைகள் வரும்; ஆனால், வேலை நிற்காது” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
இது டெல்லி அரசியலில் பெரும் பேசு பொருள் ஆகி உள்ளது. எதிர்வரும் குஜராத் தேர்தலை மனதில் வைத்து இது ஆம் ஆத்மி கட்சி மீதி நடத்தப்படும் தாக்குதல் எனவும் ஆம் ஆத்மி சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இது டெல்லியில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.