சென்னை: “2022-ம் ஆண்டில் 80,000 காசநோயாளிகளை கண்டறியும் இலக்கில் 57,970 காசநோயாளிகளைக் கண்டறிந்து 72 சதவீத இலக்கினை எட்டியுள்ளோம். இதில் இந்திய அளவில் 54 சதவீதமாக உள்ளது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் 65-வது ஆண்டு விழாவில் காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த காணொளியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசுகையில், ” இந்தியாவில் 2025-ம் ஆண்டிற்கு உள்ளாகவே காச நோயை ஒழிக்க மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றன. சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆய்வு நிறுவனம், ஊசிகள் மூலம் காசநோயை தடுத்தல், 6 மாதங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை காலக்கட்டத்தை குறைத்தல் ஆகிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, “காசநோய் இல்லா தமிழகம் 2025” என்னும் இலக்கு நிர்ணயித்து அதற்கான பல்வேறு திட்டமிடல்கள் மற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் உத்தரவின்படி காசநோயில்லா தமிழகத்தை உருவாக்க நிதி ஒதுக்கீடு ரூ.31.32 கோடியில் இருந்து ரூ.68.22 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் 23 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை ஜுலை 1-ம் தேதி நொச்சிக்குப்பத்தில் முதல்வர் தொடங்கி வைத்தார்.
காசநோய் இல்லா தமிழகம்-2025 இலக்கினை அடையும் வகையில் காசநோய் பாதிப்பு விகிதத்தை 40 சதவீதம் அளவிற்கு குறைத்த நீலகிரி மாவட்டத்தையும், 20 சதவீத அளவிற்கு குறைத்த நாமக்கல், கரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, சிவகங்கை, நீலகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட காசநோய் திட்ட குழுவிற்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2022-ம் ஆண்டில் 80,000 காசநோயாளிகளை கண்டறியும் இலக்கில் 57,970 காசநோயாளிகளைக் கண்டறிந்து 72 சதவிகித இலக்கினை எட்டியுள்ளோம். இதில் இந்திய அளவில் 54 சதவிகிதமாக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் பா.செந்தில்குமார், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன மூத்த துணை இயக்குநர் ராமகிருஷ்ணன் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பத்ம பிரியதர்ஷினி மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.