திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி (55). இவர் தன்னுடைய உறவினர்களுடன் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு 2 வேன்களில் சுமார் 40-க்கும் மேற்பட்டோருடன் நேற்று இரவு சாமி கும்பிட வந்துள்ளார். அவர்கள் அனைவரும், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வாளகத்தில் அதே ஊரைச் சேர்ந்த விக்ரம் என்பவருக்குச் சொந்தமான ஷெட்டில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் முத்துமாரி வீட்டு நிகழ்ச்சிக்காக வந்திருந்தவர்கள் சாப்பிடும் இடத்தில் மது அருந்திவிட்டு அந்த இடத்திலேயே காலி மதுபாட்டில்களை உடைத்து போட்டதாகத் தெரிகிறது. இதை ஷெட் உரிமையாளர் விக்ரம் தட்டிக்கேட்டுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரியின் உறவினர்கள் விக்ரமை தாக்கியதாகக் கூறப்படுகிறது. சிறிதுநேரத்தில் விக்ரம் தாக்கப்பட்டதை அறிந்துவந்த இருக்கன்குடியைச் சேர்ந்த அவர் உறவினர்கள் முத்துமாரியின் உறவினர்களையும் அவர்கள் வந்த வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதில் வேன் கண்ணாடி உடைந்து பலத்த சேதமடைந்தது. 3 பேருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டுள்ளது. உடனிருந்தவர்கள் போலீஸூக்குத் தகவல் சொல்லவும், விக்ரம் தரப்பினர் அங்கிருந்து தப்பியோடியதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே சம்பவத்தில் காயமடைந்த மூலச்சி ஊரைச் சேர்ந்த குமரேசன், ராகுல், செல்லப்பாண்டி ஆகிய 3 பேரும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இருதரப்பு மோதல் குறித்தும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இருக்கன்குடி போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், தாக்குதல் தொடர்பாக முத்துமாரி தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் இருக்கன்குடியைச் சேர்ந்த விக்ரம், ரமேஷ், சிவகார்த்திக், மாரிச்செல்வம் உள்ளிட்ட 10 பேர்மீது இருக்கன்குடி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்தத் தாக்குதல் சம்பவத்தால் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.