காஷ்மீரில் வாக்குரிமை அளித்ததால் ஆத்திரம் வெளிமாநிலத்தினர் மீதான தாக்குதலை அதிகரியுங்கள்: தீவிரவாதிகளுக்கு உத்தரவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், இங்கு வசிக்கும் வெளிமாநிலத்தினரும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் திடீரென அறிவித்தது. பாஜ.வை தவிர, காஷ்மீரை சேர்ந்த கட்சிகள் அனைத்தும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், நேற்று முதல் இதை கண்டித்து போராட்டங்களையும் தொடங்கி உள்ளன. இப்பிரச்னை பற்றி ஆலோசிப்பதற்காக, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா வரும் 22ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இந்நிலையில், வெளிமாநிலத்தினருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு இருப்பது, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுக்கு ஆத்திரத்தை அளித்துள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநிலத்தினர் மீதான தாக்குதலை அதிகரிக்கும்படி தீவிரவாதிகளுக்கு அவை உத்தரவிட்டுள்ளன. ‘காஷ்மீர்பைட்.காம்’ என்ற ஆன்லைன் தளத்தில் இது தொடர்பான பதிவு காணப்படுகிறது. காஷ்மீர் அல்லாத வெளிமாநிலங்களை சேர்ந்த ஊழியர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள், துணை ராணுவ படை வீரர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும்படி இதில் கூறப்பட்டுள்ளது. இது, காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநிலத்தினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.