இஸ்லாமாபாத்,
இந்தியா-பாகிஸ்தான் உறவு
காஷ்மீர் பிரச்சினை மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் சிக்கல் நீடிக்கிறது.
இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்த மத்திய அரசு மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
அதைத்தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.
நிரந்தர அமைதியை விரும்புகிறது
இந்த நிலையில் இந்தியாவுடன் நிரந்தர அமைதியை பாகிஸ்தான் விரும்புவதாகவும், காஷ்மீர் பிரச்சினைக்கு போர் தீர்வாகாது என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவிடம் பேசுகையில், ஷபாஸ் ஷெரீப் இதனை தெரிவித்தார். இதுபற்றி அவர் பேசியதாவது:-
பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. ஐ.நா. தீர்மானங்களின்படி காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது பிராந்தியத்தில் நிலையான அமைதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளர் அல்ல
இரு நாடுகளுக்கும் போர் ஒரு விருப்பமாக இருக்காது என்பதால், பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவுடன் நிரந்தர அமைதியை நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதில் மட்டுமே போட்டி இருக்க வேண்டும்.
பாகிஸ்தான் ஒரு ஆக்கிரமிப்பாளர் அல்ல. அதன் அணுசக்தி சொத்துகள் மற்றும் பயிற்சி பெற்ற ராணுவம் பாதுகாப்புக்காக மட்டுமே. பாகிஸ்தான் தனது எல்லைகளை பாதுகாப்பதற்காக ராணுவத்துக்கு செலவிடுகிறது, ஆக்கிரமிப்புக்காக அல்ல.
இவ்வாறு ஷபாஸ் ஷெரீப் பேசினார்.