கீழடி அகழாய்விற்கு டிரோன் மூலம் நிலங்களை அளவிடும் பணி துவக்கம்

திருப்புவனம்: கீழடி அகழாய்விற்காக டிரோன் மூலம் நிலங்களை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி மற்றும் சுற்று வட்டாரத்தில் 110 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டு, பள்ளிச்சந்தை திடலில் முதலாம் கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறை துவக்கியது. தொடர்ந்து கீழடியில் 2 ஏக்கர் அளவில் மட்டுமே அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள நூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட பகுதிகளில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த பிப்ரவரியில் தொடங்கிய பணிகள் வரும் செப்டம்பரில் நிறைவு பெற உள்ளது. இதுவரை கீழடியில் 9, அகரத்தில் 6, கொந்தகையில் 4 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. கீழடியில் இதுவரை 15 ஏக்கரில் மட்டுமே அகழாய்வு பணிகள் நடந்துள்ளன. கீழடியில் 110 ஏக்கரில் அகழாய்வு பணிகள் செய்யப்பட வேண்டும் என வரலாற்று அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கீழடியை சுற்றிலும் கட்டிடங்கள், தென்னந்தோப்புகள் அதிகளவில் உள்ளன. தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், சாலைகள், மின் கம்பங்கள், மின் வயர்கள், குளம், கண்மாய். விவசாய நிலங்கள் காலியாக உள்ள நிலங்களை டிரோன் மூலம் சுமார் 110 ஏக்கரையும் பதிவு செய்து வருகின்றனர். அடுத்த கட்ட அகழாய்வு நடத்தவும் இந்த அளவீட்டு பணிகள் உதவும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.