சுதந்திர தினம் முடிவடைந்து 5 நாட்கள் ஆகியுள்ள போதும் சென்னை மாநகராட்சியில் உள்ள தேசிய கொடிகள் கீழிறக்கபடமால் இருக்கின்றது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா’ (அம்ரித் மஹோத்சவ்) என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆக.13 முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.
இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பாக அனைத்து மண்டல அலுவலர்கள், அனைத்து குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் வணிகர் நலச் சங்கப் பிரதிநிதிகளுடன் 03.08.2022 அன்று மண்டல அளவில் கூட்டம் நடத்தப்பட்டு 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளில் மூவர்ண கொடி ஏற்றுவது சம்மந்தமாக வலியுறுத்தப்பட்டது.
மேலும் 15ஆம் தேதி சுதந்திர தினம் முடிந்தவுடன் இந்த கொடிகளை மரியாதையோடு இறக்கி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடிவடைந்து 5 நாட்கள் ஆகியும் தற்போது வரை இந்த கொடிகள் இறக்கப்படாமல் உள்ளது, மேலும் ஏற்றப்பட்ட கொடிகள் அனைத்தும் தற்போது சாலைகளில் கேட்பாரற்று உள்ளது.
பல இடங்களில் தேசியக் கொடிகள் சேதம் அடையப்போகும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் தேசியக் கொடிகளை கண்ணியத்துடன் இறக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM