மதுரை: புதுக்கோட்டையைச் சேர்ந்த வள்ளி என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனக்கு ஏற்கெனவே 3 குழந்தைகள் உள்ளன. அதனால் 2017-ல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.
இருப்பினும் 2020-ல் மீண்டும் கருவுற்று பெண் குழந்தை பெற்றேன். அந்த அறுவை சிகிச்சை முறையாக செய்யப்படாததால் நான் மீண்டும் குழந்தை பெற்றுள்ளேன். எனவே, இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது தவறு நேரிட்டால் ரூ.30 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும். அந்தத் தொகை மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண்களுக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் வழங்கப்படுவதில்லை. அறுவை சிகிச்சைக்கு பின்னரும் பல பெண்கள் கருவுற்று குழந்தை பெறுகின்றனர். மனுதாரர் கருவுற்றதும் வேண்டாம் என்றால் தொடக்கத்திலேயே கருக்கலைப்பு செய்திருக்கலாம்.
அதை செய்யாமல் குழந்தை பெற்றுள்ளார். இதனால் மனுதாரர் அரசிடம் இழப்பீடு எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் அவரது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அவருக்கு அரசு 8 வாரங்களில் ரூ.50 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.