சென்னை: கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தியை பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணர் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், வீடுகளில் படையலிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
தமிழகம் முழுவதும் நேற்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை அக்கரையில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்தனர். நேற்று பகல் முழுவதும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.
நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு ஸ்ரீராதா கிருஷ்ணருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள், தங்கள் குடும்பத்தாருடன் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் கிருஷ்ணரின் வாழ்வை விளக்கும் அரங்குகள் அமைப்பட்டிருந்தன. மேலும், கிருஷ்ணர் சிலைக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.
வீடுகளில் குழந்தைகளுக்கு ராதா அல்லது கிருஷ்ணர் போல உடைகளை அணிவித்தும், ரங்கோலி வரைந்தும், பலகாரங்களை படைத்தும் வழிபட்டனர். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.