கோவையில் கஞ்சா விற்றதாக 5 கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், இந்த மாணவர்கள் திருப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பதும், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படிப்பதும் தெரியவந்தது. இவர்கள், நவ இந்தியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
அங்கிருந்து தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கோவையில் சக மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“