கோவை: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை 1 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதை ஊக்கப்படுத்தும் வகையில் முதல் ஆயிரம் பேருக்கு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள், கோவை, பொள்ளாச்சி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைத் தடுக்கவும், ஒரு வாக்காளரின் விவரம் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களிலோ அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரண்டு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம் பெறுவதையோ தடுக்க வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை கடந்த 1-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.
கோவை மாவட்டத்திலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஆதார் எண் இணைக்கும் பணியை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவினர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் ஆயிரம் வாக்காளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.
https://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதள முகவரியில் மின் சான்றிதழை பெறலாம். மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவித்து, அவர்களை மின் சான்றிதழ் பெற வைக்குமாறு அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்களையும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
தனியார் நிறுவன, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தொழில் முனைவோர், அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், ஆர்வம் உள்ள வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து மின் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி கூறியதாவது: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை. விருப்பம் உள்ளவர்கள் இணைத்துக் கொள்ளலாம். வாக்காளர்கள் தங்களது வாக்குச் சாவடி நிலைய அலுவலர்களிடம் இருந்து 6பி படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். வாக்காளர் பதிவு அலுவலர்கள் (வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள்), உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்கள் (வட்டாட்சியர் அலுவலகங்கள்), வாக்காளர் உதவி மையம், இ-சேவை மையங்கள் ஆகியவற்றை அணுகியும் இணைத்துக் கொள்ளலாம்.
https://www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், VOTER HELP LINE செயலி மூலமாக தாங்களாகவே ஆன்லைன் முறையிலும் இணைத்துக் கொள்ளலாம்.
நேரடியாக 6பி படிவத்தை பூர்த்தி செய்து அளித்தால், அதற்குரிய ரெபரன்ஸ் எண் கிடைக்க தாமதமாகும்.
ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தால் உடனடியாக கிடைக்கும். மாவட்டத்தில் தற்போது வரை ஒரு லட்சம் பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மின் சான்றிதழ் பெறுவது எப்படி? தேர்தல் பிரிவு அதிகாரி கூறும்போது, ‘‘கடந்த 15-ம் தேதிக்கு பிறகு வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்த முதல் ஆயிரம் பேர் மட்டுமே மின் சான்றிதழ் பெற முடியும். மின் சான்றிதழுக்கான இணைய முகவரிக்குள் சென்று செல்போன் எண்ணை பதிவிட்டால் 5 இலக்க எண் வரும். அதை பதிவிட்டு உள்ளே நுழைந்தால் பெயர், வாக்காளர் எண், 6பி படிவத்தின் ரெபரன்ஸ் எண் வரும். இதில் 6பி படிவத்தின் ரெபரன்ஸ் எண்ணுக்குரிய இடத்தில் விண்ணப்பித்தவுடன் இறுதியாக வரும் எண்ணை பதிவிட்டு சான்றிதழ் பெறலாம்,’’ என்றார். |