விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே சேர்ந்து நடித்த ‘லிகர்’ படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தெலுங்கு மற்றும் இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டையொட்டி புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் அளித்த பேட்டியில், “எனது அடுத்த படமான ‘குஷி’ படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார், இது முழுக்க முழுக்க ரொமான்டிக் படமாக இருக்கும். இப்படம் இந்தி தவிர மற்ற மொழிகளில், குறிப்பாகத் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளை மையமாக வைத்து பைலிங்குவலாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.”
தற்போதைய பேன் இந்தியா டிரெண்டில், இந்தப் படம் இந்தி மொழியில் ஏன் வெளியாகாது என்பது பற்றிக் கூறிய அவர், “படம் எந்த மொழியில் வெளியாக வேண்டும் என்பதை அதன் ஸ்கிரிப்டை வைத்துத்தான் முடிவு செய்ய முடியும். அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளில் காஷ்மீர் மற்றும் அது சார்ந்து பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், கதைப்படி எனக்கு இந்தி தெரியாது. எனவே இதை நான் இந்தியில் டப் செய்து வெளியிட வேண்டும் என்றால் நான் இந்தி தெரிந்த பையனாக மாற வேண்டும். அது சரி வராது. இதுதவிர பல தொழில்நுட்பக் காரணங்களும் இதில் இருக்கின்றன. எனவே இப்படத்தைத் தென்னிந்தியாவில் மட்டும் வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.